1. Home
  2. தமிழ்நாடு

இந்த காலத்தில் கூட இப்படி நடக்குமா ? சென்னை அரசு பள்ளியில் சாதிக் கொடுமை! வகுப்பறையை கூட்டிப் பெருக்கச் சொல்லி...

1

சென்னை கோடம்பாக்கம், பதிப்பகச் செம்மல் க.கணபதி அரசுமேல் நிலைப்பள்ளியில் (PCKG) பயிலும் பட்டியலின மாணவர்கள்மீது 3 ஆசிரியர்கள் தீண்டாமைக் கொடுமையில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்துள்ளது.

அந்தப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவரிடம், பள்ளி ஆசிரியர்கள் ஜாதியை சொல்லியும், குடும்பத்தை இழிவாகப் பேசியும் துன்புறுத்தி வந்துள்ளனர். வகுப்பறையைக் கூட்டிப் பெருக்கச் சொல்லியும், கழிப்பறையை சுத்தம் செய்யச் சொல்லியும் கொடுமை செய்துள்ளனர்.

அண்மையில் பள்ளியில் நடந்த கலை நிகழ்ச்சியில் அந்த மாணவன் பறை அடித்ததைப் பார்த்த ஆசிரியர் சீனிவாசன் மற்றும் மீனாட்சி ஆகியோர், நல்லாதான் பறை அடிக்கிற. நீயும் உங்க அப்பா மாதிரி வேலை பார்க்கலாமெனக் கூறி உள்ளனர்.

இதனால் அந்த மாணவன் கடும் மன வேதனை அடைந்துள்ளார். இதுதொடர்பாக மாணவனின் மாமா பள்ளிக்குச் சென்று கேட்டபோது ஆசிரியர்கள் திமிராகப் பதில் அளித்துள்ளனர். இதனால், மாணவன் பள்ளி செல்வதற்கே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாகச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட மாணவரின் உறவினரும், சமூக சீர்த்திருத்தவாதி இரட்டை மலை சீனிவாசனின் பேத்தியுமான ரேவதி புகார் அளித்து உள்ளார்.

மாணவர்களிடம் தீண்டாமை கொடுமையில் ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியை மீனாட்சி, தாம் சபாநாயகர் அப்பாவுவின் தனிச் செயலாளரின் மனைவி என்றுக் கூறி மிரட்டியதாகவும் காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மீனாட்சி என்ற ஆசிரியை, மாணவர்களைச் சாதியைச் சொல்லி அநாகரீகமாகப் பேசுவதுடன், வகுப்பறையை சுத்தம் செய்யச் சொல்வது, கழிப்பறையில் தண்ணீர் அடைத்திருந்தால் சுத்தம் செய்யச் சொல்வது எனக் கொடுமைப்படுத்தி வருகிறார்.” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய மாணவரின் தந்தை லோகநாதன், “எனது மகன் உட்பட பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 4 மாணவர்களை தரையில் உட்கார வைத்து பாகுபாடு காட்டி உள்ளனர். எனது மகன் வகுப்பறையை கூட்டிப் பெருக்க மாட்டேன் எனக் கூறியதும், அந்த ஆசிரியைக்கு வெறுப்பு ஏற்பட்டு சாதி ரீதியாக கொடுமை செய்துள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like