டாக்டர்கள் 'ஷாக்'..!வயிற்றிலிருந்த 2 கிலோ முடி..!
பெய்ரேலியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் தமது 16 வயது முதல் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். எத்தனையோ தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று தொடர் சிகிச்சை எடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. மீண்டும். மீண்டும் வயிற்று வலியால் துடிக்க, கடந்த மாதம் 22ம் தேதி பெய்ரேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பலகட்ட பரிசோதனைகளுக்கு பின்னர் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் குழு முடிவு செய்தது. அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்தபோது ஒரு கணம் அனைவரும் அதிர்ந்தே போயிருக்கின்றனர்.
அதற்கு காரணம், அவரது வயிற்றில் இருந்து 2 கிலோ முடிதான். பண்டல், பண்டலாக இருந்த முடியை கொத்தாக அகற்றி இருக்கின்றனர். இந்த முடிதான் அந்த பெண்ணின் வயிற்று வலிக்கு காரணமாக இருந்திருக்கிறது. இது குறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் எம்.பி. சிங், மருத்துவர் அஞ்சலி சோனி தலைமையிலான மருத்துவர்கள் கூறி உள்ளதாவது;
அந்த பெண்ணுக்கு அரிய உளவியல் பாதிப்பு இருந்திருக்கிறது. இந்த பாதிப்புக்கு டிரைகோலோடோபேமனியா என்று பெயர். இதுபோன்ற பாதிப்பை உடையவர்கள் தன்னை அறியாமலே முடியை சாப்பிடுவார்கள். சிறுவயதில் இருந்தே இந்த பெண்ணுக்கு இத்தகைய பாதிப்பு இருந்திருக்கிறது. பெரேலி பகுதியில் கடந்த 25 ஆண்டுகளில் இத்தகைய பாதிப்பு கொண்ட ஒரே பெண் இவர்தான்.
அதுதான் தற்போது வயிற்று வலிக்கு காரணமாக அமைந்து இருக்கிறது. உரிய முறையில் அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் நலமாக உள்ளார். அவருக்கு விரைவில் உளவியல் சிகிச்சை தரப்பட உள்ளது.
இவ்வாறு மருத்துவர்கள் கூறினர்.