1. Home
  2. தமிழ்நாடு

திமுக அரசு தனது தூக்கத்தை கலைத்து ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: வானதி சீனிவாசன்!

1

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சரிவர துவரம் பருப்பு வழங்கப்படுவதில்லை. மூன்று மாதங்களாக யாருக்கும் துவரம் பருப்பு கிடைக்கவில்லை. வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 200 வரை விற்கப்படுகிறது. இதனால், ரேஷனில் கிலோ ரூ. 30-க்கு கிடைக்கும் துவரம் பருப்பை நம்பியே ஏழை, நடுத்தர மக்கள் உள்ளனர். தீபாவளி நெருங்கி வரும் நிலையில், ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக 20,000 டன் துவரம் பருப்பு ஆர்டர் செய்யப்பட்டதாகவும், அதில் 3,473 டன் மட்டுமே மட்டுமே விநியோகம் செய்யப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

அரசின் அலட்சியத்தால் மீதமுள்ள 16,527 டன் துவரம் பருப்பு உரிய நேரத்தில் வந்து சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், தீபாவளிக்கு முன் துவரம் பருப்பு பெற தகுதியான 1 கோடியே 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் துவரம் பருப்பு வழங்க முடியாது என கூறப்படுகிறது. இது ஏழை, நடுத்தர மக்களை மிக கடுமையாகப் பாதிக்கும். எனவே, திமுக அரசு தனது தூக்கத்தை கலைத்து, போர்க்கால அடிப்படையில் துவரம் பருப்பை கொள்முதல் செய்து அனைவருக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக துவரம் பருப்பு மற்றும பாமாயில் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் கிடைப்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி பருப்பு, பாமாயில் தடையின்றி வழங்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

துவரம் பருப்பு விநியோகம் தொடர்பாக பரவிய தவறான செய்திக்கு ஏற்கனவே துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தீபாவளிக்குத் தட்டுப்பாடின்றி வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தேன். அக்டோபர் மாதத் துவரம் பருப்பு ஒதுக்கீடான 20,751 மெட்ரிக் டன்னில் நேற்று (அக். 15) வரை 9,461 மெட்ரிக் டன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. 2,04,08,000 பாமாயில் பாக்கெட்கள் ஒதுக்கீட்டில் 97,83,000 பாக்கெட்கள் விநியோகப்பட்டுவிட்டன. மீதி விரைவாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனால், தீபாவளிக்கு எவ்விதத் தட்டுப்பாடுமின்றி துவரம் பருப்பும், பாமாயிலும் வழங்கப்பட்டு வருகின்றன என்பதை மீண்டும் வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like