விஜய்யின் பொங்கல் வாழ்த்தைக் கவனிச்சீங்களா?

நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"பொங்கல் திருநாள்! உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள்.
2026இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்! இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம். அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!" என குறிப்பிட்டுள்ளார்.
தை முதல் நாள் தமிழ் புத்தாண்டா அல்லது சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா என்பது ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரும் விவாதத்துக்கு உள்ளாகும் தலைப்பு. 2008ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு என்பது 'தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு' என்று அரசாணை வெளியிட்டு அறிவித்தது. பின்னர் வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அதனைத் திரும்பப்பெற்று சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது.
இந்த நிலையில், நடிகர் விஜய் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்ற 1968 ஜூலை 18 ஆம் தேதி அன்றைய முதல்வர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அதன்படி ஜூலை 18 ஆம் தேதியே தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என 2022 ஆம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, ஜூலை 18 ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், மொழிவாரி மாகாணங்களாக பிரிக்கப்பட்டு தமிழர்களுக்கு தனி மாநிலம் உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் 1 தான் தமிழ்நாடு தின வாழ்த்துகளை தவெக தலைவர் விஜய் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.