1. Home
  2. தமிழ்நாடு

பாதிக்கப்பட்ட பெண்ணே இந்த வழக்கு வேண்டாம் என்பதற்காக இப்படி செய்தார்களா..? சசிகலா கேள்வி..!

1

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாணவிகளின் அடையாளங்கள், விவரங்கள் அடங்கிய எஃப்ஐஆர் வெளியில் கசிந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்துக்கு எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலரும் கடும் அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லியிலிருந்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், தமிழக மகளிர் ஆணையம் ஏன் இந்தச் சம்பவத்தில் தலையிடவில்லை என்றும் எஃப்ஐஆர் வெளியில் கசியும் அளவுக்குத் திமுக ஆட்சி நடக்கிறதா என்றும் சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, சசிகலா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவியின் பெயரை எஃப்ஐஆரில் கூட நேரடியாகப் போடக் கூடாது, பத்திரிகையாளர்களுக்குக் கூடத் தெரியக் கூடாது.

ஆனால், மாணவி தொடர்பான அனைத்து விவரங்களும் அடங்கிய எஃப்ஐர் வெளிவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணே இந்த வழக்கு வேண்டாம் என்று ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகச் செய்தார்களா என்று யோசிக்கத் தோன்றுகிறது.

ஏனெனில் இந்த விஷயத்தைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எஃப்ஐஆர் லீக் ஆகும் அளவுக்குத் தமிழக அரசின் நிர்வாகம் உள்ளதா. இல்லையெனில் அரசின் நிர்வாகம் இப்படித்தான் உள்ளது என்று திமுக அரசு அதையாவது ஒப்புக் கொள்ள வேண்டும்.

எதுவுமே இல்லாமல் அரசு விழாக்களை நடத்திக் கொண்டு, ஒவ்வொரு பக்கமும் திராவிடம், திராவிடம் என்று பேசிக் கொள்கிறீர்கள்.

உங்களுடைய திராவிட ஆட்சியில்தான் பெண்கள் வெளியில் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒரு பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இது போன்ற நிலைமை ஏற்படுகிறது. இதுதான் திராவிட ஆட்சி என்று மேடைக்கு மேடைக்குப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல் பிரச்னையை அங்குத் துணைவேந்தர் இல்லாமல் இருப்பது தான். இந்தச் சம்பவத்துக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வது, முடிவெடுப்பது என்பது தெரியாமல் உள்ளது.

தமிழகத்தில் இதேபோல ஐந்து பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. உடனடியாக முதலமைச்சர் துணை வேந்தர் நியமனத்தை செய்ய வேண்டும். இது போன்று பல விஷயங்கள் நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, இந்தச் சம்பவத்தில் தீவிரமாக அரசு ஒரு முடிவெடுக்க வேண்டும். அதேநேரத்தில் துணைவேந்தரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக முதல்வர் ஏன் ஆமை வேகத்தில் செயல்படுகிறார் என்பது தெரியவில்லை. இதுவே ஜெயலலிதாவாக இருந்திருந்தால் நடக்கிறதே வேறு. தமிழக அரசாங்கத்தில் மகளிர் ஆணையம் இருந்தும் அண்ணா பல்கலை விவகாரத்தில் ஏன் உடனடியாகத் தலையிடவில்லை.

என்ன காரணம் என்றே தெரியவில்லை. தேசிய மகளிர் ஆணையம் டெல்லியிலிருந்து இச்சம்பவம் குறித்து இங்கு வந்து விசாரணை மேற்கொள்கின்றனர்.

ஆனால், தமிழக அரசின் மகளிர் ஆணையம் பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலில் கூட நுழையவில்லை. இச்சம்பவத்தில் திமுகவிற்கு ஏதோ ஒரு சம்பந்தம் உள்ளது என்பது இதன் மூலமாகவே புலப்படுகிறது. அதிமுகவிலிருந்து பிரிந்த அணிகள் எல்லாம் சேருவதற்கு நிச்சயம் வாய்ப்புள்ளது என்றார்.

Trending News

Latest News

You May Like