1. Home
  2. தமிழ்நாடு

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்; கோவையில் எந்த பகுதியில் அதிகம் தெரியுமா..?

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்; கோவையில் எந்த பகுதியில் அதிகம் தெரியுமா..?


“ஊரடங்கு காலமான கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும், கோவை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று, மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, கோவை மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் செய்தியாளர்களிடம் கூறியதாவது; “கோவையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்கள் உதவி மையம் அமைத்து, அங்கி பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.


குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது போக்சோ சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கணக்கெடுத்து, அதை குறைக்க ஆலோசனை கூட்டம் நடத்தினோம்.

இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியுள்ளோம். ஆன்லைன் வகுப்பு மூலமும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

கோவையில், கடந்த மூன்றரை ஆண்டுகளில் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளிடம் ஆசை வார்த்தை கூறி காதலில் விழ வைத்து, திருமணம் செய்தமைக்காக 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முகம் தெரிந்த நபர்கள் மூலம் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானவை தொடர்பாக 32 வழக்குகளும், குழந்தைத் திருமணம் தொடர்பாக 50 வழக்குகளும் பதிவு செய்துள்ளோம்.

இது தவிர, குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக வீடியோ எடுத்தமைக்காக 50 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். கோவையில் 39 ஆதரவற்ற இல்லங்கள், 2 சிறப்பு இல்லங்கள் உள்ளன. அங்கு சென்றும் குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் இருப்பதால் ஒவ்வொரு குழந்தையின் கையில் ஸ்மார்ட்போன் உள்ளது. அதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். போக்சோ குற்றத்தில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை எடுக்க முடியும். தற்போது, 6 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கோவையை பொறுத்தவரை, துடியலூர் காவல் நிலைய எல்லை மற்றும் மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லையில் அதிகமாக போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு, தலா 7 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும், தடாகம், அன்னூர், காரமடையில் தலா 5 வழக்குகள், பெரியநாயக்கன் பாளையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்துள்ளோம்.

ஊரடங்கு காலமான கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும், கோவை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று கூறினார்.

Trending News

Latest News

You May Like