தவெக மாநாடு செல்பவர்களுக்கு கட்டுப்பாடு! செல்ஃபி ஸ்டிக் பயன்படுத்தக் கூடாது..!

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியை தொடங்கினார். இதன் மூலமாக அரசியலில் அடியை எடுத்து வைத்துள்ள விஜய் கடந்த ஆகஸ்ட் மாதம் கட்சியின் கொடி மற்றும் பாடலை அறிமுகப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள விசாலை பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு மேடைகள், அலங்கார வரைவு உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. மாநாட்டு திடலில் கொடிகள் நடும் பணி முடிந்து மாநாட்டிற்கு வருவோர் அமருவதற்கான இருக்கைகள் போடப்பட்டு, மின்விளக்குகளும் பொருத்தப்பட்டு மாநாட்டு திடல் முழு அளவில் தயாராகியுள்ளது. மாநாட்டிற்கு வரும் வி சாலை பகுதியில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது
மாநாட்டு திடலில் வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், அம்பேத்கர் அஞ்சலை அம்மாள் மற்றும் விஜய் ஆகியோரின் கட்அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால் தற்காலிக மொபைல் டவரும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி குறிப்பாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றி வரவேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் விக்கிரவாண்டியில் நாளை (அக்.27) நடைபெறும் தவெக மாநாட்டுக்கு வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில், 'மாநாட்டிற்கு வருவோர், மற்ற அரசியல் கட்சிகளின் கொடிகள், பேனர்களை எடுத்து வரக்கூடாது. செல்ஃபி ஸ்டிக் பயன்படுத்தக் கூடாது, காணொளி, ஃபிளாஷ் பயன்படுத்தி போட்டோ எடுக்க அனுமதி இல்லை. மது அருந்திவிட்டு வரக்கூடாது, சட்டவிரோத பொருட்களை கொண்டு வரக் கூடாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.