1. Home
  2. தமிழ்நாடு

சென்னை ஊர்வலத்தில் உயிரிழந்த காவல் ஆய்வாளருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்!

1

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த பிரம்மோற்சவத்தின் போது, ஏழுமலையானின் கருட சேவைக்கு, தமிழக பக்தர்கள் தரப்பில் வெண்பட்டு திருக்குடைகளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். ஆண்டுதோறும் காணிக்கை செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று இந்த ஆண்டுக்கான திருமலை திரப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

அக்.2ம் தேதி தொடங்கிய இந்த ஊர்வலம், அக்.3ம் தேதி முதல் அயனாவரம், வில்லிவாக்கம், திருமுல்லைவாயில், திருவள்ளூர் வரை திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அங்கிருந்து அக்.7ம் தேதி திருமலையைச் சென்றடையும். இன்று மதியம் திருக்குடை அம்பத்தூர் பகுதி வழியாக எடுத்து செல்லப்பட்டிருந்தது. அப்போது பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்பு பணியில் கொரட்டூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் முத்துக்குமாரும் ஈடுபட்டிருந்தார்.

மதியம் 12 மணியளவில் அம்பத்தூர் பாடி-டிஎச் சாலையில் ஊர்வலம் சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஆய்வாளர் மயக்கடைந்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்ட சக காவலர்கள், அருகில் இருந்த கிளினிக்கில் முதலுதவி சிகிச்சை கொடுத்திருக்கிறார்கள். பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் மாரடைப்பால் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

திருப்பதி திருமலை திருக்குடை ஊர்வலத்தில் காவல் ஆய்வாளர் உயிரிழிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து உயிரிழந்த முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சத்தை நிவாரணமாக அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, கொரட்டூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த முத்துகுமார் (வயது 47) என்பவர் இன்று (04.10.2024) சென்னையில் நடைபெற்ற திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென்று மயக்கம் ஏற்பட்டு உடனடியாக சென்னை, முகப்பேரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பிற்பகல் 01.15 மணியளவில் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையடைந்தேன். காவல் ஆய்வாளர் முத்துகுமார் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். காவல் ஆய்வாளர் முத்துகுமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும். அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தாவிட்டுள்ளேன்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Trending News

Latest News

You May Like