595 பூங்காக்களை பராமரிக்க தனியாரிடம் ஒப்பந்தம் கோர சென்னை மாநகராட்சி முடிவு ..!
சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சென்னையில் ஒன்று முதல் 15-வது மண்டலம் வரை 871 பூங்காக்கள் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. மேலும், பல்வேறு அரசு திட்டங்களின் மூலமாக புதிய பூங்காக்கள் உருவாக்கப்படுகிறது.
அனைத்து பூங்காக்களையும் மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக பராமரிப்பை மேற்கொண்டால் பணிகளில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தற்போது 89 பூங்காக்கள் தத்தெடுப்பு முறையிலும் 168 பூங்காக்கள் மாநகராட்சி பணியாளர்கள் மூலமும் பராமரிக்கப்படுகிறது. மீதமுள்ள 595 பூங்காக்களுக்கு வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 15 மண்டலங்களிலும் உள்ள 595 பூங்காக்களை பராமரிக்க பேக்கேஜ் முறையில் ஒப்பந்தம் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், செனாய் நகர், பீட்டர்ஸ் சாலை, நொளம்பூர், பெருங்குடி வீரபாண்டிய கட்டபொம்மன் குறுக்கு தெரு, 197-வது வார்டு இஸ்கான் கோயில் அருகில் உள்ள உயிர் இயற்கை எரிவாயு உற்பத்தி கூடம் அருகே உள்ளிட்ட இடங்களில் ஒருங்கிணைந்த கோசாலை அமைக்கப்பட உள்ளது.
செனாய் நகர் அம்மா அரங்கம், டி.நகர் சர் பிடி தியாகராய அரங்கம் ஆகியன போதிய வருவாய் எட்டாத காரணத்தால் வாடகை மறு நிர்ணயம் செய்து ஐந்து ஆண்டுகளுக்கு தனியாருக்கு குத்தகைக்க விட முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.