நடிகர் டெல்லி கணேஷ் உடனான நினைவுகளை பகிர்ந்து கொண்ட பிரபலங்கள்!
நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு நடிகர் கார்த்தி மற்றும் சந்தான பாரதி உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் நடிகர் அஜித் சார்பில் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா அஞ்சலி செலுத்தினார். "நடிகர் அஜித் பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருப்பதால் அவரது சார்பாக அஞ்சலி செலுத்தியுள்ளதாக" சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரைப்பிரபலங்கள், டெல்லி கணேஷ் உடனான தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
நடிகர் கார்த்தி: "எங்களுடைய பாக்கியம். கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் டெல்லி கணேஷ் அவர்களின் நடிப்பைப் பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினோம். அப்போது மகிழ்ச்சியுடன் பல விஷயங்கள் குறித்துப் பேசினார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை முழுமையாக செய்யக்கூடிய ஒரு நடிகர். அவர் மருத்துவமனைக்குச் சென்று கஷ்டப்படாமல் தூக்கத்திலேயே இறந்தது தான் சந்தோசமான ஒரு விஷயமாக நான் பார்க்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்" என்றார்.
இயக்குநர் சந்தான பாரதி: "எனக்கு மிக பெரிய நெருக்கமான நடிகர். எந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும், எதில் நடிக்கக் கூடாது என்பதில் அவருக்கென்று ஒரு கட்டுப்பாடு இருக்கும். அவரது இழப்பு எனக்கு மிக வருத்தமான ஒரு விஷயமாகும்"
நடிகர் ரமேஷ் கண்ணா: "இது மாபெரும் இழப்பு. நான் அவருடைய நெருங்கிய நண்பர். ஏதுவாக இருந்தாலும் என்னிடம் தான் அழைப்பு விடுத்து பேசுவார். நிகழ்ச்சிகளுக்கு செல்லமுடியவில்லை என்றால் என்னைத் தான் அழைத்து செல்ல வைப்பார். நாடகங்களில் கூட கண் கலங்க வைத்த நடிகர்” என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன்: "நான் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்த சமயத்தில் என்னை அரவணைத்து, எனக்கு பல விஷயங்களை சொல்லிக்கொடுத்து என்னை அவ்வளவு பாதுகாப்பாக பார்த்துக்கொண்டார். அப்போது நான் குறும்படம் எடுக்கிறேன் என்று டெல்லி கணேசிடம் சொல்லும் போது, என்னை எந்த கேள்வியும் கேட்காமல் நீ பண்ணு நான் நடிக்கிறேன். நான் உனக்கு உதவி செய்கிறேன் என்று சொல்வார். தனிப்பட்ட முறையில் எனக்கு அவரது மறைவு பெரும் இழப்பு" என்றார்.
டெல்லி கணேஷ் குரலில் மிமிக்ரி செய்த நடிகர் மணிகண்டன்: "ஒருமுறை எனக்கு தவறுதலாக அழைப்பு விடுத்த அவர், "அய்யயோ மாற்றி உனக்குப் போட்டுவிட்டேன், சரி போட்டது தான் போட்டேன் ஒரு 10 நிமிடம் என்னுடன் பேசு" என நகைச்சுவை எண்ணம் மாறாமல் பேசினார். என்னுடைய குறும்படத்தில் அவர் நடித்திருக்கிறார்.
அந்த சமயத்தில் அவர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. இதன் பின்னர் உடனடியாக அவருக்கு போன் செய்தேன். அப்போது "கவலைப் படாதே உன்னுடைய படத்தில் நடிக்காமல் சாக மாட்டேன் என சொன்னார்" அவரது வாழ்க்கையிலிருந்து நான் நிறையப் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.
நடிகர் சித்திரா லக்ஷ்மணன்: "டெல்லி கணேஷ் எங்கே இருந்தாலும் அவரை சுற்றி நண்பர்கள் கூட்டம் இருப்பார்கள். எல்லோரையும் உண்மையாக நேர்மையாக நேசிப்பார். எந்த கதாபாத்திரத்தை எடுத்தாலும் இயல்பாக நடிப்பார். எப்போதும் அவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். இன்று தான் அவர் இருக்கும் இந்த இடம் அமைதியாக உள்ளது" என உருக்கமாகப் பேசினார்.
இயக்குநர் லிங்குசாமி: "என்னுடைய முதல் படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஒரே ஒரு படம் என்னுடன் வேலை செய்திருந்தாலும் தொடர்ந்து என்னுடன் தொடர்பிலிருந்தார். கமலுடன் நிறையப் படங்களில் நடித்துள்ளார். இறுதியாக அவரது புத்தக வெளியிட்டு விழாவில் அவரை சந்தித்தேன். அவரது இழப்பு உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது.
நடிகை தேவயானி: நான் அவரிடம் நிறையப் படங்களில் நடித்துள்ளேன். எப்போது அவரை நான் அப்பாபோல்தான் பார்ப்பேன். நிறையக் கதைகள் சொல்வார். அவரை மிகவும் மிஸ் பண்ணுவேன். வித விதமான கதாபாத்திரங்கள் நடித்து இருக்கிறார். அப்பா எங்கு இருந்தாலும் அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று பேசினார்.
நடிகர் சிவகுமார்: "டெல்லி கணேஷ் மிக நல்ல நடிகர். அவருடைய இரண்டாவது படத்தில் என்னோடு நடித்திருந்தார்.
பல படங்களில் நடித்திருந்தாலும் அவரோடு இணைந்து நடித்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது" என்றார்.
நடிகர் ஒய்ஜி மகேந்திரன்: "எத்தனை ஆண்டுகள் அவருடன் பழகி இருக்கிறேன் என்று தெரியவில்லை. ஷூட்டிங் செல்லும் போது ஒரு சிலர் நடிகர்கள் அங்கு இருக்கிறார்கள் என்றால் அவ்வளவு சந்தோசமாக இருக்கும். அப்படி ஒரு சில நடிகர்களில் ஒருவர் டெல்லி கணேஷ். மிக திறமையானவர். அவருக்கு.எல்லாவிதமான திறமையும் உண்டு. யாரையும் அவர் நோகடித்தது இல்லை. நல்ல நடிகரை நாம் இழந்து விட்டோம்" என தெரிவித்தார்.
இயக்குநர் விக்ரமன்: 1996 ஆம் ஆண்டு புதிய மன்னர்கள் படத்தில் அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அந்தப் படத்தில் அவர் கதாபாத்திரம் சிறப்பாக இருக்கும். உன்னை நினைத்தேன் படத்தில் நடித்திருக்கிறார் இதைத் தாண்டி அவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு அவரும் நானும் திருநெல்வேலி மாவட்டம்.
20 முதல் 25 நாட்கள் முன்பு வரை கூட சிம்ஸ் மருத்துவமனையில் ஒரு மருத்துவரைப் பார்க்கச் சென்றபோது கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் வரை அவருடன் பேசிக்கொண்டிருந்தோம். தலைசிறந்த நடிகர் தெனாலி, அவ்வை சண்முகி என தலைசிறந்த நடிகராக இருந்தவர்.அவரது இறப்பு தமிழ் சினிமாவுக்கு மிகப் பெரிய பேரிழப்பு" என தெரிவித்தார்.