ஞானசேகரன் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு! புதிதாக 4 செக்ஷன் சேர்ப்பு..!
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி, இரவு நேரத்தில் மற்றொரு மாணவருடன் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த நபர் ஒருவர், மாணவரைத் தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே இந்த விவகாரத்தில் காவல் துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை (FIR) வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 15 நாள் காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கைது செய்ய முயன்றபோது போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற ஞானசேகரனுக்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஞானசேகரன் மீது கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து 20 வழக்குகள் உள்ளது. எல்லா வழக்குகளும் திருட்டு சம்பந்தமான வழக்குகள். பெண்களை துன்புறுத்தியதாகவோ, ரவுடியிசம் செய்ததாகவோ வழக்கு எதுவும் இல்லை. இதுவரை பெண்கள் இந்த நபரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற புகார் இதற்கு முன்பு வரவில்லை. இப்போது தான் வந்திருக்கிறது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஞானசேகரன் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. சட்ட விரோதமாக ஒருவரை தடுத்து வைத்தல், தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.