சென்னையில் இந்த 2 நாட்கள் கடலில் குளிக்க தடை..!
2025 புத்தாண்டு இன்னும் இரண்டு நாளில் பிறக்க போகிறது. பலரும் புத்தாண்டை கொண்டாட தயாராகி வருகிறது. சென்னையை பொறுத்தவரை நீலாங்கரை தொடங்கி மகாபலிபுரம் வரை கடற்கரையை ஒட்டியுள்ள தங்கும் விடுதிகளில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் கூட்டம் அலைமோதும்.
பீச் ஹவுஸ்களில் புத்தாண்டு கொண்டாட்டம் ஒவ்வொரு ஆண்டும் களைகட்டும். இதேபோல் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரையில் பல ஆயிரம் மக்கள் கூடுவார்கள். எங்கும் மனித தலைகளாக இருக்கும். குறிப்பாக மெரினா கடற்கரையை பொறுத்தவரை லைட் ஹவுஸ் முதல் அண்ணா சதுக்கம் வரை வாகனங்களே செல்ல முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதும். இதேபோல் அனைத்து டாஸ்மாக் பார்களிலும் கூட்டம் அலைமோதும். குடிமகன்கள் பலர் குடித்துவிட்டு கிளப்களில், பெரிய நட்சத்திர பார்களில், நடனம் ஆடுவார்கள். பொதுவாகவே புத்தாண்டின் போது குடிமகன்கள் அதிகமாக மது அருந்திவிட்டுஉலாவுவது வழக்கமாக உள்ளது. இதனால் மதுபோதையில் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது. இதை தடுக்க சென்னை முழுக்க டிசம்பர் 31ம் தேதி இரவு போலீசார் தடுப்புகள் வைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.
இதேபோல் 31ம் தேதி இரவு மேம்பாலங்களில் செல்லவும் தடை விதிப்பார்கள். மத போதையில் யாரும் விபத்தில் சிக்கிவிடக்கூடாது என்ற நோக்கத்தில் தீவிர சோதனை செய்யும் போலீசார், கடும் நடவடிக்கை எடுப்பார்கள்.
அந்த வகையில் சென்னையை பொறுத்தவரை டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ம் தேதிகளில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, கோவளம் கடற்கரை, மகாபலிபுரம் கடற்கரை என சென்னை மற்றும் புறநகர் பகுதி முழுக்க கடலில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை என்று காவல்துறை அறிவித்துள்ளது.
கடற்கரை ஓரங்களில் உரிய தடுபபுகள் அமைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையை பொறுத்தவரை பார்க்கிங், பொதுமக்கள் புறப்பாடு உள்ளிட்டவை குறித்து விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.