1. Home
  2. தமிழ்நாடு

ஆடி ஞாயிறு: கூழ் காய்ச்சி ஊற்றினால் அம்மன் அகம் மகிழ்வாள்!

ஆடி ஞாயிறு: கூழ் காய்ச்சி ஊற்றினால் அம்மன் அகம் மகிழ்வாள்!

ஆடி மாதம் முழுவதும் விரதங்களும், பூஜைகளும், சிறப்பு வழி பாடுகளும் நடந்துகொண்டிருக்கும். அம்மனை வீட்டுக்கு அழைத்து வருவதுதான் ஆடி மாதம் கூழ் வார்த்தல் திருவிழா.

நகரமயமாகிவிட்ட இக்காலத்தில் கோயில்களில் கூழ் வார்த்து வழிபடுவது, குறைவாக இருக்கிறது. பெரும்பாலானவர்கள் வீட்டிலேயே அம்மனுக்கு கூழ் வார்த்து வழிபடுகிறார்கள். இதனால், ஆடி வெள்ளிக்கிழமை மட்டுமல்லாது வீடுகளில் ஞாயிற்றுக்கிழமையன்றும் அம்மன் எழுந்தருளுகிறாள். ஆம், ஞாயிறன்று வீடுகளில் கூழ் வார்த்து வீதி முழுவதும் வசிக்கும் மக்களுக்கும், வீதியில் செல்பவருக்கும் கூழ்வார்த்து அம்மன் அருளைப் பெறுகிறார்கள்.

அம்மனுக்கு ஏன் கூழ்வார்த்தல் முக்கியம் என்பதைப் பார்த்தோம். இனி கூழ் வார்த்தலில் என்னென்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

ஆடிக்கூழ்
தேவைப்படும் பொருட்கள்:
கேழ்வரகு -2 பெரிய கப்,
தண்ணீர் - தேவைக்கு ஏற்ப,
உப்பு -ஒரு சிட்டிகை,
அரிசி நொய் -1 கப்,
முதல் நாள் அகல பாத்திரத்தில் கேழ்வரகு மாவுடன் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும். மறுநாள் நண்பகலில் கூழ் வைக்கும் பெரிய பாத்திரத்தில் மஞ்சள், குங்குமம் வைத்து, நீர் விட்டு நீர் கொதித்ததும் அரிசி நொய்யைக் கலந்து அரை பதம் வெந்ததும், கரைத்து வைத்திருக்கும் கேழ்வரகு மாவை சேர்த்து, அடுப்பை மிதமானத் தீயில் வைத்து கட்டியில்லாமல் நன்றாக கலந்து, வேக விடவும். கூழ் பதத்துக்கு கெட்டியானதும் உப்பு சேர்த்து இறக்கவும். கூழ் தயார்.

பாத்திரத்தின் வாய்பகுதியில் வேப்பிலையைக் கோர்த்து கட்டி விடவும். மறுநாள் கூழ் வார்க்கும் போது பெரிய பாத்திரத்தில் இறுகி யிருக்கும் கூழ் எடுத்து, தேவையான அளவு நீர், மோர் கரைத்து, சின்ன வெங்காயம் நறுக்கி அனைவருக்கும் கொடுக்கலாம்.

துள்ளுமாவு:
பச்சரிசியைச் சுத்தம் செய்து ஊறவைத்து மிக்ஸியில் மாவாக்கி, வெல்லம் பொடி செய்து சேர்த்து ஏலக்காய்த் தூளைக் கலந்து வைக்கவும்.

பிடி கொழுக்கட்டை:
பச்சரிசி மாவில் செய்த பிடிக்கொழுக்கட்டையும், பிரசாதமாக வைக்கவேண்டும். பச்சரிசி மாவில் வெல்லத்தைப் பாகாக்கி கொட்டி தேங்காய்த்துருவல், ஏலக்காய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து பிடி கொழுக்கட்டைகள் செய்து ஆவியில் வேகவைத்து இறக்கவும்.

முருங்கைக்கீரை துவட்டல்:
முருங்கைக்கீரையில் பருப்பு தேங்காய்த் துருவல் சேர்த்து செய்யும் பொரியல் இன்றைய தினத்தில் மிகவும் விசேஷமானது.

மேற்கண்ட கூழ்வார்ப்பு சடங்கு அனைவருக்கும் பொதுவானது. என்னதான் அசைவப் பிரியர்களாக இருந்தாலும், பெரும்பாலாேனார், ஆடி மாதத்தில் அசைவ உணவு வகைகளை தவிர்த்துவிடுவர். எனினும் சிலர், கருவாட்டு குழம்பு, அசைவப் படையல் என, அம்மனுக்கு படையலிட்டு வழிபடுவதும் உண்டு. இது, அசைவ பிரியர்கள் தாங்கள் விரும்பி உண்ணும் அசைவ உணவு வகைகளை, அம்மனுக்கும் படைத்து வழிபடும் முறை.

கருவாட்டுக்குழம்பு:
கூழ் என்றாலே கருவாட்டுக் குழம்புதான். ஆனால் கோயில்களில் அம்மனைத் தவிர வேறு தெய்வங்கள் இருந்தால் கருவாட்டுக்குழம்புக்கு பதில் மொச்சையும், கத்தரிக்காயும் சேர்த்து பிரட்டல் செய்து வைத்து வழிபடுவார்கள். வீடுகளில் நிச்சயம் கருவாட்டுக்குழம்பு மணக்கும். அம்மனுக்கு பிடித்த படையலில் இதுவும் ஒன்று என்பது சிலரது நம்பிக்கை.

நடு வீட்டில் புது புடவை வைத்து கூழ் பாத்திரத்தை வைத்து, இலை போட்டு சுற்றிலும் இதர படையல்கள் வைத்து வழிபட வேண்டும்.

கும்பம்:
கோயிலில் கூழ் வார்ப்பர்வர்கள் செய்யாத வழிபாடு கும்ப வழிபாடு. வீடுகளில் கூழ் வார்க்கும் போது கும்பம் வைத்து வழிபடுவார்கள். காலையில் கூழ் ஊற்றுபவர்கள் நண்பகலில் கும்ப வழி பாடு செய்வார்கள். அசைவ உணவுகளான முட்டை, மீன், இறைச்சி வகைகள் சமைத்து சமையலறையில் வைத்து படையலிட்டு வழிபடுவார்கள். இதைத்தான் கும்ப வழிபாடு என்கிறோம்.

நாளை ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை. அம்மனை வரவேற்க கூழ்வார்த்தல் வழிபாட்டை மேற்கொள் ளுங்கள். வீட்டிலும் முடியவில்லை, குடியிருக்கும் கோயிலின் அருகில் கூழ்வார்த்தல் வைபவம் இல்லை என்றாலும் வருந்த வேண்டாம். வெளியிடங்களில் கோயில் நிர்வாகம் நடத்தும் கூழ்வார்த்தல் நிகழ்ச்சிக்கு கேழ்வரகு மாவை வாங்கிக்கொடுங்கள். அம்மனின் அருள் கிடைக்கும்.

Trending News

Latest News

You May Like