காலையில் கைது...மாலையில் ஜாமீன் - அல்லு அர்ஜுன் விவகாரத்தில் நடந்து என்ன ?
கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா இரண்டாம் பாகம் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆறு நாட்களில் இப்படம் ரூ.1,000 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதற்கிடையே, கடந்த டிசம்பர் 4ஆம் தேதி, ஐதராபாத்தில் சிக்கடப்பள்ளியில் உள்ள சந்தியா திரையரங்கில் இரவு 9.30 மணிக்கு புஷ்பா-2 பிரீமியர் காட்சியைக் காண குடும்பத்துடன் சென்ற 35 வயதான ரேவதி என்ற பெண் கூட்டத்தில் சிக்கி மயங்கி விழுந்தார். உடனே, அப்பெண்ணை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். இது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ரேவதியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் அல்லு அர்ஜுன் மற்றும் தியேட்டர் நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்குதாக அல்லு அர்ஜுன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான், அந்தப் பெண் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூனை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுனை நம்பள்ளி நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், அவருக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. "அல்லு அர்ஜுன் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து அல்லு அர்ஜுன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில், அல்லு அர்ஜுனின் மக்கள் தொடர்பு குழு பகிர்ந்துள்ள தகவலின்படி, வழக்கை கைவிட தயாராக இருப்பதாக குடும்பத்தினர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இதுகுறித்து கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் கணவர் பாஸ்கர், "வழக்கை வாபஸ் பெற தயாராக இருக்கிறேன். கைது செய்யப்பட்டது எனக்கு தெரியாது. அல்லு அர்ஜூனுக்கும் என் மனைவி இறந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை" என அவர் தெரிவித்துள்ளார்.