Armstrong-யை கொல்ல ரூட் போட்ட எஸ்.ஐ.மகன்?
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ஆம் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 வழக்குரைஞா்கள் உள்பட 17 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்குத் தொடா்பாக தாம்பரம் மண்ணிவாக்கம் பகுதியைச் சோ்ந்த ரெளடி சீசிங் ராஜா, சென்னை தண்டையாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த ரெளடி சம்பவம் செந்தில் ஆகிய 2 பேரையும் தனிப்படையினா் தீவிரமாக தேடி வருகின்றனா்.
இந்த வழக்குத் தொடா்பாக ரெளடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய உறவினா் பெரம்பூரைச் சோ்ந்த பிரதீப் (28) என்பவரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தனிப்படையினா் விசாரணை செய்தனா்.
விசாரணையின்போது, பிரதீப், ஆம்ஸ்ட்ராங் கொலையில் நேரடியாக ஈடுபட்ட கொலையாளிகளுக்கு உதவியது தெரியவந்தது.
குற்றவாளிகளுக்கு உதவியது தெரியவந்ததையடுத்து போலீஸாா், பிரதீப்பை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா் ஊா்க் காவல் படையில் சிறிது காலம் பணியாற்றியவர் என்பதும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் ஒவ்வொரு நாளும் எங்கெங்குச் செல்வார் என்பதையும், அவரது அன்றாட நடவடிக்கைகளையும் நோட்டமிட்டு கொலையாளிகளுக்கு பிரதீப்தான் தகவல் தெரிவித்ததாக போலீஸாா் குறிப்பிட்டுள்ளனர்.
பிரதீப்பின் தந்தை திருநாவுக்கரசு சென்னை காவல்துறையின் ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆற்காடு சுரேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டபோது அவரது இறுதி சடங்கு முழுவதும் பிரதீப் இருந்துள்ளார் என்பதும் காவல்துறையினர் தற்போது நடத்திய விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.