நடிகர் அல்லு அர்ஜுனுக்கு அண்ணாமலை ஆதரவு..!
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பேட்டி ஒன்றை பார்த்தேன். தெலங்கானாவில் சூப்பர் ஸ்டார் ஆவதற்காக அவர் போட்டி போடுகிறார் என்று நினைக்கிறேன். அல்லு அர்ஜுனை விட தான் பெரிய சூப்பர் ஸ்டார் என்று காட்டிக் கொள்ள அவர் இவ்வாறு செய்கிறார். தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்று அவர் நினைத்துக் கொள்கிறார். இப்போது கூட அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
அவரும் சினிமாவுக்கு சென்று தான் ஒரு நடிகன் என்று நிரூபித்தால் அது சண்டை போடுவதற்கான ஒரு வழி என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ரேவந்த் ரெட்டி தனது அதிகாரத்தை பயன்படுத்துகிறார். மக்களுக்கு சேவை செய்யத்தான் உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அல்லு அர்ஜுன் தன் மீது தவறு இருப்பதை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்ட பிறகும் கூட அவரை துன்புறுத்துவது, சட்டப்பேரவையில் அவரது பெயரை குறிப்பிட்டு பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
தியேட்டருக்கு வந்தால் யாரேனும் உயிரிழப்பார்கள் என்பது அல்லு அர்ஜுனுக்கு தெரியுமா? இந்த விவகாரத்தில் அவரை பலிகடா ஆக்குவது நல்லதல்ல. சட்டம் என்பது அனைவருக்கும் சமம். ஆனால் அல்லு அர்ஜுன் விவகாரத்தில் ரேவந்த் ரெட்டி பேசியதில் வெறுப்பை மட்டுமே நான் பார்க்கிறேன். அவரது வார்த்தைகளில் நடுநிலைமை இல்லை” இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.