கோபங்கள் தீர்த்திடும் தணிகைமலை சுப்பிரமணியர்!!

தமிழ்க்கடவுள் முருகன் அழகிய திரு உருவம் கொண்ட எழிலன்.

கோபங்கள் தீர்த்திடும்  தணிகைமலை சுப்பிரமணியர்!!
X

தமிழ்க்கடவுள் முருகன் அழகிய திரு உருவம் கொண்ட எழிலன். மலைகள் தோறும் வேலும் மயிலும் கொண்டு வீற்றிருந்து வேண்டிய வரம் தரும் அருளாளன். அறுபடை வீடுகளில் சாந்த சொருப முருகனை தரிசிக்க நாம் செல்ல வேண்டியத் திருத்தலம் திருத்தணி.
வேலவனின் ஐந்தாம் படை வீடே திருத்தணி.தமிழகத்தின் வடக்கு எல்லையாம் திருத்தணி மலையில், வள்ளியைத் திருமணம் செய்து கொண்ட முருகப்பெருமானின் சக்தி நிறைந்த திருத்தலமே திருத்தணி.

தேவர்கள் பயம் நீக்கியது இந்தத் திருத்தலம். தேவர்களுக்கு கடும் தொந்தரவுகள் கொடுத்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர்புரிந்து, கோபம் தணிந்து அமர்ந்த தலமே திருத்தணிகை.

எம்பெருமான் முருகனின் கோபம் இந்த தலத்தில் தணிந்தமையால் இந்த இடத்திற்கு தணிகை எனப் பெயர் ஏற்பட்டது. முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம்,தன்னை நாடி வரும் பக்தர்களின் துயரம், துன்பம், கவலை, பிணி, வறுமை என அத்தனை சிக்கல்களையும் தணிக்கும் இடமே திருத்தணித் திருத்தலம். இந்த திருத்தணி மலையில் முருகன் சுப்பிரமணிய சுவாமியாக எழுந்தருளி உள்ளார்.

திருத்தணி மலையின் இரண்டு பக்கங்களிலும் மலைத் தொடர்ச்சி பரவியுள்ளது. வடக்கே உள்ள மலை வெண்மையாக இருப்பதால் பச்சரிசி மலையென்றும் தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால் புண்ணாக்கு மலை என்றும் அழைக்கப்படுகிறது. ‘சரவணப் பொய்கை’ என்ற `குமார தீர்த்தம்' என்ற திருக்குளம் மலைஅடிவாரத்தில் உள்ளது.

திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான், தன் கிரியா சக்தியாகிய தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டார். இந்த திருத்தணி மலையில் இச்சா சக்தியாகிய வள்ளியம்மையை திருமணம் செய்து கொண்டு அருள் பாலித்து வருகிறார்.

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வடலூர் இராமலிங்க அடிகள், கந்தப்பைய தேசிகர், கச்சியப்ப முனிவ கச்சியப்ப சிவாசாரியார் மற்றும் அருணகிரி நாதர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலம் இது.அருணகிரிநாதர் இத்தலத்தை போற்றி 63 திருப்பாடல்களை பாடியுள்ளார்.

அரக்கோணத்தில் இருந்து 18 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு வடமேற்கே 84 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ள திருத்தணியில் ஆடிக் கிருத்திகை மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது .ஆடிக் கிருத்திகை நாளில் தணிகை மலை சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க நம் துன்பங்கள் நீங்கும் . மகிழ்ச்சி நம் மனங்களிலும் இல்லத்திலும் நீடித்து நிலைக்கும்.

ஓம் திருத்தணி முருகனுக்கு அரோகரா!

newstm.in

Tags:
Next Story
Share it