#Save our daughters : தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டிய அ.தி.மு.க..!
தமிழ்நாடு முழுவதும் யார் அந்த சார்? என்ற கேள்வியுடன் அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின.
அதைத் தொடர்ந்து, மாணவி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை(FIR) வெளியானதையடுத்து போராட்டங்கள் வெடித்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது வரை பல விஷயங்கள் நடந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் கண்டன போராட்டமும் நடைபெற்ற நிலையில், 'யார் அந்த சார்?' என அதிமுக போஸ்டர்கள் ஒட்டி வருகிறது.
அதாவது இந்த சம்பவம் தொடர்பாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் திமுகவை சேர்ந்த ஞானசேகர் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். மாணவியின் வாக்குமூலம் படி, “ ஞானசேகர் தன்னை மிரட்டிய போது, சார் ஒருவருக்கும் நீ ஒத்துழைக்க வேண்டும்” என கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த சம்பவத்தின் போது ஞானசேகரனுக்கு ஒரு போன் வந்ததாகவும் அதில் மாணவியை மிரட்டி விட்டு அனுப்பி விடுவதாக தெரிவித்துள்ளார் ஞானசேகரன். எனவே இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் யார்? என கேள்வியானது எழுந்துள்ளது.
ஆனால் காவல்துறை தரப்போ அப்படி சார் என யாரும் இல்லை. மாணவியை மிரட்டவே தனது போனுக்கு வராத கால்களை காட்டி மிரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்த போது யார் அந்த சார் ? ஏன் அவரை கைது செய்யாமல் காவல்துறை மறைக்கிறது என கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் யார் அந்த சார் ? என கேள்வி எழுப்பி தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார்? Save our daughter's என அச்சிடப்பட்டுள்ளது.
சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.