ஒரு வீரர் ஒரே ஒரு ஜல்லிக்கட்டுப் போட்டியில் மட்டுமே பங்கேற்ற அனுமதி..!
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைளை முன்னிட்டு இந்த போட்டி நடத்தப்பட்டு வரும் நிலையில், 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15ஆம் தேதி பாலமேட்டிலும், 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பாக அந்தந்த கிராம விழாக்குழுக்களுடன் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், காவல் ஆணையர் லோகநாதன், காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தின்போது மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, ஜல்லிக்கட்டுப் போட்டியில் பொதுமக்கள் அமரும் இடம், காளைகள் செல்லும் வழியில் அமைக்க வேண்டிய தடுப்புகள், மற்ற கட்டமைப்புப் பணிகளுக்கு உடனடியாக டெண்டர் விடப்பட்டு பணிகளைத் தொடங்க உத்தரவிட்டார். தொடர்ந்து பேசிய ஆட்சியர் “ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளைகள் மற்றும் வீரர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும்.
காளைகள் மற்றும் மாடுபிடிவீரர்கள் ஆன்லைன் மூலமே விண்ணப்பித்துப் போட்டிகளில் பங்கேற்க முடியும். ஆன்லைனில் காளைகளின் உண்மையான புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். காளைகளுக்கான மருத்துவப் பரிசோதனை வீரர்களுக்கான மருத்துவப் பரிசோதனை செய்ய மருத்துவக் குழுக்கள் அமைக்க வேண்டும். ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் இடத்தில் தேவையான இடங்களில் கேமரா பொருத்தப்படும். ஜல்லிக்கட்டு காளையுடன் ஒரு பங்கேற்பாளர் மட்டுமே செல்ல முடியும்.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சாதிப் பெயர் சொல்லி காளைகளை அவிழ்க்கக்கூடாது. உரிமையாளர் பெயரை மட்டுமே சொல்ல வேண்டும். மதுரை மாவட்டத்தில் நடைபெறும் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில், ஒரு காளை, ஒரு மாடுபிடிவீரர் ஒரேயொரு ஜல்லிக்கட்டுப் போட்டியில் மட்டுமே பங்கேற்க இயலும். அந்தக் கிராமங்களுக்கு என தனித்தனியாக டோக்கன் பெற வேண்டும். ஒரே டோக்கன் பெற்று அனைத்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளிலும் பங்கேற்க முடியாது.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் பொதுமக்கள் இருக்கும் இடங்களுக்கு தாவி விடாமல் 8 அடிக்கு இரண்டடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். மாடுபிடி வீரர்கள் ஊக்கமருந்து மது அருந்தி இருக்கக்கூடாது. காளைகளுக்கு மது கொடுக்கப்பட்டுள்ளதா என சோதனை செய்யப்படும். காளையின் கொம்பில் ரப்பர் புஸ் வைக்க வேண்டும் என மனுக்கள் வந்துள்ளன. இது தொடர்பாக அரசு செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். கொம்புகளில் ரப்பர் புஸ் வைப்பது தொடர்பாக உரிய முடிவெடுக்க அரசுத்துறைகள் கால்நடைத்துறைக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டது” என ஆலோசனைகள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி, ”காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ஆன்லைன் வாயிலாக முன்பதிவு நடைபெறும். அரசு சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு மூன்று ஊர்களிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும். ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் தமிழக அரசின் சார்பில் எந்த ஒரு பரிசுகளும் வழங்குவதில்லை. ஒவ்வொரு ஊரிலும் நன்கொடையாளர்கள் வழங்கக்கூடிய பரிசுகள் காளை உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.