அரசியலில் புது திருப்பம்..! திடீரென அதிமுகவை பாராட்டிய அண்ணாமலை..!
கடந்த 23 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த எஃப்.ஐ.ஆரில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் சார், சார் என்று கூறி ஒருவரிடம் போனில் பேசியதாக பாதிக்கப்பட்ட மாணவி கூறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. யார் அந்த சார்? பெரிய புள்ளி யாரும் சம்பந்தப்பட்டுள்ளனரா என கேள்வி எழுந்தது. ஆனால், அந்த மாணவியை மிரட்டுவதற்காக ஞானசேகரன் வேண்டுமென்றே அவ்வாறு பேசியுள்ளார் என்றும், அந்த சமயத்தில் ஞானசேகரனின் செல்போன் ஏரோபிளேன் மோடில் இருந்தது என்றும், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த "சார்" குறித்த சந்தேகத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றன.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அதிமுகவினர் ஏராளமானோர் திடீரென குவிந்தனர். அதிமுக ஐ.டி விங்கை சேர்ந்தவர்கள் மாலின் உள்ளே நுழைந்து, தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி போராட்டம் நடத்தினர். அவர்களது கைகளில் வைத்த பதாகைகளில் "யார் அந்த சார்?" என்ற வாசகம் இடம் பெற்று உள்ளது.
மேலும், அதிமுக ஐடி விங் அணியினர், எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் இருந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம், இது தொடர்பாக எடுத்துரைத்து, தமிழக அரசுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "யார் அந்த சார்?" என்ற பதாகையுடன் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நூதன போராட்டத்தில் குதித்த அதிமுகவை பாராட்டி உள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சாமானிய மக்களை பாதிக்கும் பிரச்சனைகளில் தலையிடாமல் அரசியலில் ஒருபோதும் இருக்க முடியாது. இந்தப் பிரச்சனையை எடுத்துக்கொண்டு ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டதற்கு பாராட்டுகள்" எனக் குறிப்பிட்டு உள்ளார்.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் அதிமுக ஐடி விங் சார்பில் நடத்தப்பட்ட நூதன போராட்டத்திற்கு அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.