ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோத திருவிழா..!
ஒவ்வொரு கோயில்களிலும் பாரம்பரியமான வழிபாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. சில கோயில்களில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்ச்சிகளும், பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் விழாக்களும் கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில், மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள அனுப்பப்பட்டி கிராமத்தில் கரும்பாறை ஸ்ரீ முத்தையா சுவாமி கோவிலில் மார்கழி மாத விழா கொண்டாடப்பட்டது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நலன் வேண்டியும் மார்கழி மாதத்தில் விழா கொண்டாடுவது வழக்கம். இந்த விழாவில் ஆட்டுக் கிடாய் விருந்து அன்னதானமாக வழங்கப்படுவது வழக்கம். தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற வேண்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் கொடுப்பது வழக்கம். பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் கருப்பு நிறத்திலான ஆடுகளை முத்தையா சுவாமிக்கு நேர்த்திக்கடனாகத் செலுத்துவர். இந்த விழாவில் ஆண்டுகள் மட்டுமே பங்கேற்பது வழக்கம். பெண்கள் கலந்துகொள்ள அனுமதி கிடையாது. நடப்பு ஆண்டில் கரும்பாறை ஸ்ரீ முத்தையா சுவாமி கோயிலின் மார்கழி மாத விழா இன்று நடைபெற்றது. முத்தையா சுவாமிக்கு பக்தர்கள் பொங்கல், சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து வழிபாடு நடத்தினர். பின்னர், பக்தர்கள் 66 ஆட்டுக் கிடாய்களை நேர்த்திக்கடனாகச் செலுத்தினர். தொடர்ந்து, 2 ஆயிரம் கிலோ அரிசியில் ஆட்டுக் கிடாய் விருந்து சமைக்கப்பட்டு ஆண்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆட்டுக் கிடாய் விருந்தில் திருமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான கிண்ணிமங்கலம், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சாப்பிட்டனர்.
இந்த விழா குறித்து கிராம மக்கள் கூறியதாவது: ஸ்ரீ முத்தையா சுவாமி கோயிலில் விவசாயம் செழிக்க வேண்டி ஆண்டுதோறும் ஆண்கள் பங்கேற்கும் விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அன்னதானம் சாப்பிட்டவர்கள் சாப்பிட்ட இலையை எடுக்காமல் அங்கேயே விட்டுச் செல்ல வேண்டும். இலைகள் காய்ந்த பின்னர்தான் கோயிலுக்கு பெண்கள் வர அனுமதி அளிக்கப்படும்.
ஸ்ரீ முத்தையா சுவாமி கோயிலில் பக்தர்கள் சுவாமியிடம் தங்களது கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என மனதார வேண்டிக் கொண்டும், அந்த விஷயம் நிறைவேறினால் கருப்பு ஆடுகளை காணிக்கையாகச் செலுத்துகிறேன் என்றும் கூறி வழிபடுவது வழக்கம். அவ்வாறு வேண்டிக் கொள்பவர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய பின்பு நேர்த்திக் கடனை நிறைவேற்றும் விதமாக கருப்பு ஆடுகளை காணிக்கையாக செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பாரம்பரியமாக இந்த வழக்கத்தை திருமங்கலம் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.