மூன்றாம் உலகப் போர் மூளும்.. ரஷ்யா எச்சரிக்கை..!

மூன்றாம் உலகப் போர் மூளும்.. ரஷ்யா எச்சரிக்கை..!

மூன்றாம் உலகப் போர் மூளும்.. ரஷ்யா எச்சரிக்கை..!
X

உக்ரைன் போர் மூன்றாவது உலகப் போராக உருவெடுப்பதற்கான அபாயம் இருப்பதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சொகெய் லாவ்ரோவ் அந்த நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “உக்ரைன் சண்டையால் மூன்றாம் உலகப் போர் வெடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்று பலரும் கூறி வருகின்றனர்.

ஆனால், இயற்கையாகவே அத்தகைய போர் மூள்வதற்கான அபாயம் இல்லாவிட்டாலும், அது செயற்கையாக உருவாக்கப்படுகிறது.

எங்களுடன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்துவதில் ஆர்வம் காட்டாமல் மேற்கத்திய நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதில்தான் உக்ரைன் தீவிரம் காட்டி வருகிறது.

இது, ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். மூன்றாம் உலகப் போர் அபாயம் என்பது வெறும் ஊகமல்ல, அது உண்மையிலேயே உள்ளது. அந்த அபாயத்தை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது” என்றார்.

சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் அண்டை நாடான உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி படையெடுத்தது.

அதிலிருந்து, தங்கள் நாட்டு வான் எல்லையில் பறக்கும் ரஷ்ய விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை நேட்டோ படை சுட்டு வீழ்த்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு உதவிகளை உக்ரைன் அதிபர் வொலோதிமீா் செலென்ஸ்கி வலியுறுத்தி வந்தார்.

ரஷ்யப் படையினரை எதிா்த்துப் போரிட தங்களுக்கு வலிமை வாய்ந்த ஆயுதங்களை அனுப்பவேண்டும் எனவும் அவர் மேற்கத்திய நாடுகளிடம் கோரிக்கை விடுத்து வந்தார்.

எனினும், உக்ரைன் போரில் நேரடியாக தலையிட்டால் அது தங்களுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போராக உருவெடுக்கக் கூடும் என்று மேற்கத்திய நாடுகள் கருதின.

உக்ரைன் மீதான போரை அறிவிக்கும்போதே, அந்தப் போரில் மேற்கத்திய நாடுகள் தலையிட்டால் அவை வரலாற்றில் இதுவரை காணாத மோசமான பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், உக்ரைன் அதிபரின் தொடர் வேண்டுகோள்களை மேற்கத்திய நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்று வருகின்றன. தங்களிடமுள்ள விமான எதிர்ப்பு பீரங்கிகள் உள்ளிட்ட சக்திவாய்ந்த ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்ப இருப்பதாக அவை அறிவித்து வருகின்றன.

இந்தச் சூழலில், உக்ரைன் போர் மூன்றாம் உலகப் போராக உருவெடுக்கும் அபாயம் உள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சொகெய் லாவ்ரோவ் தற்போது எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it