1. Home
  2. தமிழ்நாடு

வரும் 5-ம் தேதி முதல் தடையற்ற மின்சாரம்.. தலைமை பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை..!

வரும் 5-ம் தேதி முதல் தடையற்ற மின்சாரம்.. தலைமை பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை..!


தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அதன்படி, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 5-ம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்குகிறது.

இதேபோல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 6-ம் தேதியும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 10-ம் தேதியும் தேர்வுகள் தொடங்கவுள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 3,119 மையங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெறுகிறது.

12-ம் வகுப்பு தேர்வை 8 லட்சத்து 37,317 மாணவர்களும், 11-ம் வகுப்பு தேர்வை 8 லட்சத்து 83,884 பேரும், 10-ம் வகுப்பு தேர்வை 9 லட்சத்து 56,474 பேரும் எழுதுகின்றனர். பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது, தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் விநியோகிக்க வேண்டும் என மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்தடை ஏற்பட்டால், மாற்று வசதி ஏற்படுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும். பொதுத்தேர்வு மையங்களில் மின்வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே மின் பாதைகள் பற்றி ஆய்வு செய்ய வேண்டும்.

பொதுத்தேர்வு மையங்களுக்கு அருகே உள்ள மின்மாற்றி பழுதடைந்தால் உடனே மாற்ற வேண்டும் என, மண்டல தலைமை பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like