சென்னையை அதிரவைத்த ரயில் விபத்து.. 9 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

சென்னையை அதிரவைத்த ரயில் விபத்து.. 9 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

சென்னையை அதிரவைத்த ரயில் விபத்து.. 9 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு
X

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் நேற்று மின்சார ரயில் நடைமேடையில் ஏறி கடையின் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயிலில் பயணிகள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

அதாவது, நேற்று மாலை 4.50 மணிக்கு கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி மின்சார ரெயில் புறப்பட இருந்தது. இதற்காக மாலை 4.25 மணி அளவில் கடற்கரை பணிமனையில் இருந்து 1ஆவது நடைமேடைக்கு 12 பெட்டிகள் கொண்ட நவீன ‘3 பேஸ்’ மின்சார ரயில் எடுத்து வரப்பட்டது.

train

இந்த ரயிலை கேரளாவை சேர்ந்த பவித்ரன் என்பவர் இயக்கி வந்தார். ரயில் நிலையத்துக்கு உள்ளே வந்த மின்சார ரயில் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறியது. தொடர்ந்து நடைமேடை 1ன் தொடக்கத்தில் இருந்த கடையின் சுவற்றின் மீது மோதி நிற்காமல் கடையை உடைத்து கொண்டு உள்ளே சென்றது. இதனால் அந்த பகுதியில் பெரும் சத்தத்துடன் புழுதி கிளம்பி பெரும் புகை மூட்டமாக காட்சி அளித்தது.

இதைக்கண்ட அங்கிருந்த பயணிகள் அலறி அடித்து கொண்டு ஓடினர். ரயிலில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. இருந்தபோதிலும் மின்சார ரயிலின் என்ஜின் பெட்டியும், அடுத்திருந்த பெட்டியும் என 2 பெட்டிகள் மட்டும் இந்த விபத்தில் பெரும் சேதத்துக்கு உள்ளாகி தடம்புரண்டன.
இதில் என்ஜின் பெட்டி 2 கடைகளின் இடிபாடுகளுக்கு மேல் சென்று நின்றது. இந்த விபத்து குறித்து உடனடியாக தகவல் அறிந்தவுடன் 1ஆவது நடைமேடைக்கு செல்லும் அனைத்து மின்சார இணைப்பையும் ரெயில்வே ஊழியர்கள் துண்டித்தனர்.

இந்த நிலையில் விபத்துக்குள்ளான மின்சார ரயிலை, ரயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. சந்தோஷ் என்.சந்திரன், சென்னை ரெயில்வே போலீஸ் எஸ்.பி. இளங்கோ, சென்னை எழும்பூர் டி.எஸ்.பி. ஸ்ரீகாந்த் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ரயில் சென்றுக்கொண்டிருந்தப்போது திடீரென ‘பிரேக்’ செயல்படவில்லை என பவித்ரன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

train

இதையடுத்து விபத்துக்குள்ளான மின்சார ரெயிலை நடைமேடையில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். கூடுதல் உதவிக்காக 2-வது நடைமேடைக்கு நவீன எந்திரங்கள் கொண்ட ரயில் பெட்டியும் உடனடியாக வரவழைக்கப்பட்டது. மேலும் ரயில்வே என்ஜினீயரிங் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, விபத்துக்குள்ளான 2 பெட்டிகளில் இருந்து மற்ற 10 பெட்டிகளுக்கும் உள்ள இணைப்பை நவீன ‘வெல்டிங்’ எந்திரம் மூலம் ஊழியர்கள் பிரித்தனர்.

இதையடுத்து மறுமுனையில் இருந்த மின்சார ரெயில் என்ஜின் இயக்கப்பட்டு அந்த 10 பெட்டிகளும் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து விபத்துக்குள்ளான 2 பெட்டிகளையும் மீண்டும் எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து ‘டபிள்யூ.டி.எம்.-7’ எனப்படும் டீசல் என்ஜின் கடற்கரை ரயில் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு, மின்சார ரயில் என்ஜினை மீட்டனர்.
கடற்கரை ரயில் நிலையத்தின், 4 நடைமேடைகளில் இருந்து மின்சார ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று நடைமேடை 1-ல் விபத்து ஏற்பட்டதால், மின்சார ரெயில்கள் நடைமேடை 3 மற்றும் 4-ல் இருந்து மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

சில ரயில்கள் சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

newstm.in

Next Story
Share it