1. Home
  2. தமிழ்நாடு

தாயை கட்டிப்போட்டு மகளை கடத்திய கும்பல்.. விசாரணையில் பகீர் பின்னணி

தாயை கட்டிப்போட்டு மகளை கடத்திய கும்பல்.. விசாரணையில் பகீர் பின்னணி


வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்ட 11 வயது சிறுமியை தனிப்படை போலீசார் இன்று பத்திரமாக மீட்டனர்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகேயுள்ள காளிசெட்டிப்பட்டி கிராமத்தில் சரவணன் (39) - கவுசல்யா (29) தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜோனின் (14) என்ற மகனும், மவுலீசா (11) என்ற மகளும் உள்ளனர். மவுலீசா புதுப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறாள்.

சரவணன் தனது குடும்பத்துடன் கடந்த 6 ஆண்டுகளாக முருகேசன் என்பவரின் மாடி வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். இந்த நிலையில், சரவணன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டார். வழக்கம்போல் கவுசல்யா தனது இரு பிள்ளைகளுடன் இரவில் மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது இரவு சுமார் 2 மணி அளவில் முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் மொட்டை மாடிக்கு சென்றனர்.

தாயை கட்டிப்போட்டு மகளை கடத்திய கும்பல்.. விசாரணையில் பகீர் பின்னணி

அங்கு தூங்கி கொண்டிருந்த கவுசல்யாவை எழுப்பி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். மேலும் கவுசல்யா மற்றும் தூங்கி கொண்டிருந்த ஜோனின் வாய்களில் பிளாஸ்டிக் பேண்டேஜ் ஒட்டினர். இதையடுத்து 2 பேரின் கைகளையும் பின்னால் கட்டி போட்டு விட்டு 2 பேரும் சத்தம் போட்டால் மகளை கொன்று விடுவதாக மிரட்டினர்.

இதையடுத்து சிறுமி மவுலீசாவை மிரட்டி அங்கிருந்து கடத்தி சென்று விட்டனர். மேலும் கவுசல்யா அணிந்திருந்த நகை, வெள்ளி கொலுசு ஆகியவற்றையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதையடுத்து கவுசல்யா அங்கிருந்த கத்தியை எடுத்து, கைகளில் கட்டப்பட்ட கயிற்றை அறுத்து சத்தம் போட்டுள்ளார்.

அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் நடந்ததை கேட்டு பல இடங்களில் தேடியும் சிறுமியை மீட்கமுடியவில்லை. இதையடுத்து உடனடியாக எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. அது எருமப்பட்டி செல்லும் சாலையில் உள்ள கஸ்தூரிப்பட்டி புதூர் வரை ஓடி சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களும் மொட்டை மாடியில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமி போலீசார் தேடி வந்தனர்.

தாயை கட்டிப்போட்டு மகளை கடத்திய கும்பல்.. விசாரணையில் பகீர் பின்னணி

எருமப்பட்டி அருகே சிறுமியை கடத்திய மர்மநபர்கள் கவுசல்யா வைத்திருந்த செல்போனில் இருந்த சிம் கார்டையும் எடுத்து சென்றனர். இதையடுத்து நேற்று காலை 11 மணி அளவில் வீட்டின் உரிமையாளரான முருகேசனுக்கு கவுசல்யாவின் சிம் எண்ணில் இருந்து போன் வந்தது. அப்போது போனில் பேசிய மர்மநபர்கள் சிறுமி மவுலீசா உயிருடன் வேண்டும் என்றால் தங்களுக்கு ரூ.50 லட்சம் தர வேண்டும் என கூறி மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்துள்ளனர்.

அதன்பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கடத்தப்பட்ட சிறுமி அலங்காந்தம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் விட்டு விட்டுச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் சிறுமி கடத்தப்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் சிறுமி கடத்தல் தொடர்பாக அதே ஊரை சேர்ந்த பொன்னுமணி, மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீசார் நெருங்குவதை அறிந்து கடத்தலில் ஈடுபட்ட உறவினர்கள் விட்டுச்சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like