1. Home
  2. தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுக்கும் சர்ப்ரைஸ்..!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுக்கும் சர்ப்ரைஸ்..!!


கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, திமுகவின் தேர்தல் அறிக்கையே வித்தியாசமாக இருந்தது. அதில் இலவசங்களை புகுத்தவில்லை. கலர் கலராக திட்டங்களை சொல்லி மக்களை ஏமாற்றவில்லை. மாறாக, நடைமுறை யதார்த்தத்தை புரிந்து கொண்டு, மக்களுக்கு தேவையான மற்றும் தவிர்க்க முடியாத அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது பெரிதும் கவனத்தை பெற்றிருந்தது.

அதேசமயம், தேர்தல் பிரச்சாரத்தில் மிக முக்கியமான வாக்குறுதிகளையும் திமுக தரப்பு தந்திருந்தது. இதெல்லாம் பிரச்சார சமயத்தில் யார் வேண்டுமானாலும் சொல்லக்கூடிய வாக்குறுதிகள் என்று நினைத்துவிட முடியாது. காரணம், ஆட்சிக்கு வந்ததுமே அவைகளில் இல்லாத சில அறிவிப்புகளையும் அறிவித்து மக்களை திக்குமுக்காட வைத்துவிட்டது திமுக அரசு.

அந்த வகையில், இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் கவனத்தை பெற்றது. ஆனால், இதை உடனடியாக திமுக அரசால் செயல்படுத்த முடியவில்லை. இதற்கு காரணம், கஜானாவை காலி செய்துவைத்துவிட்டு போயிருந்தது அதிமுக அரசு. இதுபோக, முழு ஊரடங்கு அரசின் வருமானம் வரும் வழிகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன. அதையும் மீறிதான் பல திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்பட்டன என்பதை நம்மால் மறுக்க முடியாது.

தொற்று குறைந்திருந்த நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்த நிலையில், 1,000 ரூபாய் எப்போது கிடைக்கும் என்ற ஆர்வம் மறுபடியும் மக்களிடம் எகிறியது. எப்படி பார்த்தாலும் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால், அந்த தேர்தலுக்குள், கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றிவிடும் என்று நம்பப்பட்டது.

எனவே அப்போது நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று நம்பப்பட்டது. நிதி நெருக்கடி மற்றும் பிற காரணங்களால் அப்படி எதுவுமே வெளியாகவில்லை.

இதைதான் எதிர்க்கட்சிகள் பிடித்து கொண்டன. எங்கே போனாலும், ‘பொய்யான வாக்குறுதி திமுக’ என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டன. இப்போதுவரை இந்த விமர்சனத்தை ஆளும் கட்சியால் தகர்க்க முடியாத நிலைமை உள்ளது. எனினும், 1,000 ரூபாய் எப்போது தரப்படும் என்பது குறித்து, அமைச்சர் சக்கரபாணி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்து நம்பிக்கை கருத்துக்களை தங்கள் பேட்டிகளில் தெரிவித்தபடியே இருந்தனர்.

இந்நிலையில்தான், மறுபடியும் நாளை பட்ஜெட் ஆரம்பமாகிறது. மறுபடியும் 1000 ரூபாய் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையின்படி முதல்முறையாக தமிழ்நாட்டில் வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டும் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. பெரும்பாலும் மார்ச் 19-ம் தேதி தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில்,கொரோனா காரணமாக வருவாய் பற்றாக்குறை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், வரும் நிதியாண்டில் அதை குறைக்கும் நடவடிக்கைகளுக்கான திட்டங்கள், நிதிப் பற்றாக்குறையை குறைப்பதற்கான திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, பத்திரப்பதிவு, வணிகவரி, ஆயத்தீர்வை வருவாயை பெருமளவு நம்பியுள்ளது. ஒரே நாடு ஒரேபதிவு முறை அமல்படுத்தப்படும் பட்சத்தில், இந்த பத்திரப்பதிவு வருவாய் குறைய வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.

எனவே, இதற்கு ஈடுபடுகொடுக்கும்வகையில், வரி வருவாயை பெருக்கும் வகையில் புதிய திட்டங்களும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும், நகைக்கடன் ரத்து, கல்வி கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புகளும், அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வரும் அறிவிப்பும் இந்த முறை பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

என்றாலும், 1,000 ரூபாய் அறிவிப்பு குறித்து, இந்த முறை அறிவிப்பு நிச்சயம் வரும் என்று கூறப்படுகிறது. ஆனால், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் வழங்கும் அளவுக்கு நிதி நிலைமை இருக்காது என்பதால், ஒருசில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, அதற்கு தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் அமல்படுத்தப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

Trending News

Latest News

You May Like