சிவராத்திரி பூஜையும் நற்பலன்களும்..!!

சிவராத்திரி பூஜையும் நற்பலன்களும்..!!

சிவராத்திரி பூஜையும் நற்பலன்களும்..!!
X

மாசி மாத மஹாசிவராத்திரி இன்று. மகத்துவம் நிறைந்த இந்த மாசி மஹா சிவராத்திரி விரதத்தை, பிரளய காலங்களில், கிருத யுகத்தில் பார்வதி தேவியும், திரேதா யுகத்தில் முருகப்பெருமானும், துவாபர யுகத்தில் தொந்தியப்பனும், கலியுகத்துக்கு முற்பட்ட காலத்தில், விஷ்ணு பகவானும் சிவராத்திரி விரதம் மேற் கொண்டதாக சிவப்புராணம் கூறுகிறது.

சிவராத்திரி, திங்கள்கிழமையில் வருவது விசேஷத்திலும் விசேஷம். இதை, லோக சிவராத்திரி என்றும் சொல்லலாம். இன்று விரதம் கடைப்பிடித்து, இரவு முழுவதும் சிவ வழிபாட்டில் கலந்து கொண்டால், புண்ணியத்தின் மேல் புண்ணியம் சேரும் என்பது ஐதிகம்.

இன்று முழுவதும் சிவனுக்கு உபவாசம் இருந்து, சிவபுராணம் படித்து, நமசிவாய மந்திரத்தை உச்சரித்தபடி இறைவழிபாட்டில் ஈடுபடவேண்டும். எல்லா சிவாலயங்களிலும் மஹாசிவராத்திரியன்று, நான்கு கால பூஜை சிறப்பாக நடைபெறும்.

நான்கு ஜாமம் என்பது, மாலை 6 மணிமுதல் மறுநாள் காலை 6 மணி வரையிலான, 12 மனிநேர காலத்தைக் குறிக்கும். ஒவ்வொரு ஜாமம் என்பது, 3 மணிநேர இடைவெளியைக் கொண்டது. நான்கு ஜாம பூஜைகளிலும், பஞ்ச வில்வ இலைகளால், பஞ்சமுக அர்ச்சனை செய்ய வேண்டும்.

மனம், புத்தி, சித்தம், அகங்காரம் போன்ற நான்கையும், இறைவனின் பாதத்தில் சமர்ப்பிப்பதே, நான்கு ஜாம பூஜைகள் உணர்த்துகின்றது. இரவு முழுவதும் இறைவனை தியானித்து, நான்கு ஜாம பூஜைகளில் கலந்து கொள்ள வேண்டும். இயலாதவர்கள், நான்காவது ஜாம பூஜையின் போது, பஞ்சமுக தீப அர்ச்சனையில் கலந்துகொள்ள வேண்டும் என்று ஞான நூல்கள் வலியுறுத்துகின்றன.

முதல் ஜாமம்: இரவு, 7:30

படைக்கும் பிரம்மா, சிவப்பெருமானுக்கு செய்யும் பூஜை. பசும்பால், பசுந்தயிர், பசு நெய், கோமியம், கோசாணம் என பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் செய்து, தாமரை மலர்களால் அலங்காரம் செய்து, பாசிப்பருப்பு பொங்கல் நிவேதனமாக படைக்கப்படும்.
வில்வம் , பழம் முதல் நிவேதனமாக கொள்ளப்படுகிறது. நெய் தீபம் ஏற்றப்படும். ரிக் வேத பாராயணம் நடைபெறும். இக்கால பூஜை வழிபாடு, நம்முடைய பிறவிக் கர்மாக்களில் இருந்து விடுபட உதவும் என்பது ஐதிகம்.

இரண்டாவது ஜாமம்: இரவு 10:30

காக்கும் கடவுளாகிய விஷ்ணு, சிவப்பெருமானுக்கு செய்யும் பூஜை. பஞ்சா பிஷேகத்தால் அபிஷேகம் செய்து, சந்தனக் காப்பு சாற்றப்படும். லட்டும், பாயசமும் நிவேதனமாக படைக்கப்படும். நல்லெண்ணெய் தீபத்துடன், யஜூர் வேத பாராயணம் நடத்தப்படும். இந்த பூஜையில் கலந்து கொண்டால், தன தான்ய சம்பத்துகள் தடையின்றி கிடைக்கும்.

மூன்றாவது ஜாமம்:நள்ளிரவு 12:00

சக்தியின் வடிவமான அம்பாள், சிவப்பெருமானுக்கு செய்யும் பூஜை. இக்காலத்தில், தேனால் அபிஷேகம் செய்யப்படும். இது, லிங்கோத்பவ காலம் என்றும் அழைக்கப்படும். தாழம்பூ இந்நாளில் மட்டுமே சாற்றப்படும் என்பது சிறப்பு. சாம வேதம் ஓதப்படும். இந்த மூன்றாவது ஜாமத்தில் கலந்துகொண்டு பூஜிப்பதால், எந்த தீய சக்தியும் நம்மை நெருங்காமல் இருக்க அன்னை பார்வதி தேவி அருள்புரிவார்.

நான்காவது ஜாமம்: அதிகாலை, 4:30 மணிக்கு

முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், அசுர கணங்கள், மனிதர்கள் உலகில் சகல ஜீவராசிகளும் சிவனை பூஜிக்கும் காலம். கரும்புச்சாறு அபிஷேகத்துடன், குங்குமப்பூ சாற்றி அனைத்து வித மலர்களாலும் அர்ச்சிக்கப்படும். அதர்வண வேத பாராயணத்துடன், 18 விதமான சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு, சற்று நேரத்தில் உச்சிக்கால பூஜையும் முடித்து விடுவார்கள். அனைத்து மகிழ்ச்சிகளையும் அளிக்கும் இந்த நான்காம் ஜாம பூஜை.

கண்ணுறங்காமல் அகில உலகை ஆளும் ஈசனை தியானித்து, 24 மஹாசிவராத்திரிகள் விரதமிருப்பது நல்லது. அல்லது, தொடர்ந்து 12 சிவராத்திரிகள் விரதமிருந்தால், முக்தி கிடைப்பதோடு, அடுத்து வரும், 21 தலைமுறையினருக்கும் பலன் கிட்டும் என்பது திண்ணம்.

Tags:
Next Story
Share it