24 வருடங்கள் சிவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தால் .....!!

24 வருடங்கள் சிவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தால் .....!!

24 வருடங்கள் சிவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தால் .....!!
X

அகிலத்தை ஆளும் அகிலாண்டேஸ்வரரின் கண்களை குறும்புக்கார பார்வதி விளையாட்டாக மூடினாள். அண்ட சராசரங்கள் சூரியன், சந்திரன்றி இருளை சூழ்ந்தன. சிவப்பெருமான் நெற்றிக்கண்ணிலிருந்த மூன்றாவது கண்ணை திறந்தார். நெருப்பு குழம்பில் பாய்ந்து வந்த ஒளியைக் கண்டு விண்ணுலகத்திலும் மண்ணுலகத்திலும் அச்சம் கொண்டனர். அப்போது செய்த தவறை உணர்ந்த பார்வதிதேவி சிவப்பெருமானை நினைத்து இரவு முழுவதும் நான்கு ஜாமங்களிலும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். இவ்வாறு சக்தி தேவி வழிபட்ட இரவே மஹா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

தேவியின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசனிடம் இந்நாளில் நான் வழிபட்டது போல் தங்களை வழிபடுபவர்களுக்கும் செல்வமும், சொர்க்கமும் மோட்சமும் தர வேண்டும் என்று வேண்டினாள். சிவப்பெருமானுன் தேவியின் வேண்டுதலுக்கு செவிசாய்த்தார். அதன்படியே தேவர்களாலும், மனிதர்களாலும் மஹா சிவராத்திரி சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்வாறு சிவ மகா புராணம் சொல்கிறது. சிவனுக்குரியது ராத்திரி என்பதாலேயே இது சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

விரதமிருக்கும் முறை:

சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டும் உணவருந்த வேண்டும். மஷா சிவராத்திரியன்று அதிகாலையில் நீராடி சிவாலயத்துக்கு சென்று சிவனை ஒருமுகமாக வணங்க வேண்டும். அன்றைய தினம் முழுக்க நமசிவாய என்னும் திருமந்திரத்தை மனதிற்குள் ஓதிக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஓராண்டு முழுக்க சிவபூஜை செய்த புண்ணியத்தைக் கொடுக்கும். மனதில் எந்தவிதமான குழப்பங்களுக்கும் கோபங்களுக்கும் இடம் கொடாமல் அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். மனம் எப்போதும் இறைவனை நிந்தித்தப்படி இருக்க தேவாரம், திருவாசகம், சிவப்புராணம் போன்ற நூல்களை படிக்க வேண்டும். சிவராத்திரி அன்று தண்ணீர் கூட குடிக்காமல் உபவாசம் இருப்பது நல்லது. எனினும் வயதானவர்கள் பழச்சாறு, பால் அருந்தலாம்.

மாலையில் மீண்டும் குளித்து நெற்றியில் திரு நீறு தரித்து வீட்டில் பூஜை செய்து அருகில் இருக்கும் சிவாலயங்களுக்குச் சென்று சிவனை தரிசிக்க வேண்டும். அன்று இரவு தூங்காமல் இருந்து வீட்டிலேயே நான்கு ஜாம பூஜைகளையும் செய்யலாம்.அவ்வாறு செய்ய இயலாதவர்கள் கோயில்களில் நடைபெறும் நான்கு ஜாம பூஜைகளில் கலந்து கொண்டு நமசிவாயா என்னும் மந்திரத்தை விடாமல் சொல்ல வேண்டும். அன்று ஆலயங்களில் பிரதட்சனம் செய்து சிவனின் மூலமந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். நான்கு ஜாமங்களிலும் பால், தயிர், வெண்ணெய், தேன் ஆகியவை அபிஷேகத்துக்கு பயன் படுத்துவார்கள். சிவனை வழிபட நறுமண மிக்க மலர்கள். அலங்காரம் இவற்றை விட வில்வ இலைகளே சிறந்தது என்பதால் விரதம் மேற்கொள்பவர்கள் வில்வ மாலைகளை சாற்றுவது நல்லது.

மறுநாள் காலையில் நீராடி சிவனை துதித்து சிவபுராணம், சிவத்துதிகளைச் சொல்லி வணங்க வேண்டும். இயன்றவர்கள் ஆடைக அன்னதானம் செய்யலாம். பூஜை முடித்து ஒரு வேளை உணவருந்தி அன்று பகல் முடியும் வரை உறங்காமல் இரவு பொழுது உண்ணாமல் உறங்க வேண்டும். சிவசிந்தனையுடன் முழு விரதமிருந்து இறைவனை தியானிப்பவர்களை வாழ்நாள் முழுவதும் உடனிருந்து காப்பார் எம்பெருமானாகிய சிவப்பெருமான். இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.

பார்வதி தேவியே கடைப்பிடித்த சிவராத்திரி விரதத்தை உரிய நெறிமுறையோடு 24 வருடங்கள் கடைப்பிடித்தால் அவர்களது மூவேழு தலைமுறைகளும் நற்கதிகளைப் பெறுவார்கள் என்று சிவராத்திரி புராணத்தில் கூறப்பட்டுள்ளது. மஹா சிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிப்பவர்களை நெருங்க யமனும் அச்சப்படுவான் என்பது ஐதிகம்.

Tags:
Next Story
Share it