மதுரையில் பெரும் சோகம்.. விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி..!

மதுரையில் பெரும் சோகம்.. விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி..!

மதுரையில் பெரும் சோகம்.. விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி..!
X

மதுரை பழங்காநத்தம் நேரு நகர் கந்தசாமி தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அங்குள்ள பெரிய தொட்டியில் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து மின்மோட்டார் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அந்த கழிவுநீர் தொட்டியில் உள்ள மின் மோட்டார் கடந்த 2 நாட்களாக இயங்கவில்லை. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து மாநகராட்சி சார்பில் அந்த பணியை ஒப்பந்தத்திற்கு எடுத்த தனியார் நிறுவனம் சார்பில் ஊழியர்கள் மோட்டாரை பழுது பார்க்கும் பணியை கடந்த 2 நாட்களாக செய்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு மாடக்குளத்தை சேர்ந்த சிவக்குமார் (45), மின்மோட்டாரை பழுது பார்த்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தொட்டிக்குள் தவறி விழுந்தார்.

இதையடுத்து அவர் சத்தம் போடவே, கழிவுநீர் தொட்டிக்கு வெளியே இருந்த மாடக்குளம் சரவணன் (32), அலங்காநல்லூர் லட்சுமணன் (31) ஆகியோர் அவரை காப்பாற்ற தொட்டிக்குள் இறங்கினர். அப்போது, அவர்களும் தொட்டிக்குள் தவறி விழுந்தனர்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து திடீர்நகர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு அதிகாரி பாலமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

கழிவுநீர் தொட்டிக்குள் விஷவாயு அபாயம் இருந்ததால், தொட்டிக்குள் விழுந்த 3 பேரையும் மீட்கும் பணியில் கவனமாக ஈடுபட்டனர்.

மிகவும் சிரமப்பட்டு சுமார் 30 அடி ஆழத்தில் இறங்கி மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் 3 பேரும் விஷவாயு தாக்கி இறந்துவிட்டதால் அவர்களை பிணமாகவே மீட்க முடிந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை மற்றும் எஸ்.எஸ்.காலனி போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது விஷவாயு தாக்கி 3 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விஜிஆர் என்ற தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் ஆனந்த், ஊழியர்கள் ரமேஷ், லோகநாதன் ஆகியோர் மீது எம்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 3 தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து விஷவாயு தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story
Share it