காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு டெல்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

கடந்த 2-ம் தேதி காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து சோனியா காந்தி வீட்டிலேயே தம்மை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது மகளும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி, கொரோனா பாதிப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை மூத்த காங்கிரஸ் தலைவர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் சோனியா காந்தியின் உடல்நலம் சீராக இருப்பதாகவும் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு டெல்லி கங்காராம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காங்கிரஸ் கட்சியின் ஜெயராம் ரமேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பால் ஜூன் 12-ம் தேதி சோனியாவுக்கு மூக்கில் இருந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சோனியா காந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சோனியா காந்தியின் சுவாச மண்டலத்தில் பூஞ்சை தொற்று பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சோனியா காந்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
A statement on Congress President’s health condition. pic.twitter.com/4tVBtgyhEi
— Jairam Ramesh (@Jairam_Ramesh) June 17, 2022
முன்னதாக நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த 8-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி அமலாக்கத் துறை அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், தொற்று பாதிப்பால் அவரால் ஆஜராக முடியவில்லை. அதனால், கூடுதல் அவகாசம் கோரினார். அதன்படி, வரும் 23-ம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.