ஹெலிகாப்டர் வாங்கணும்.. ரூ.6.65 கோடி கடன் கொடுங்க.. அதிகாரியை அதிர வைத்த விவசாயி..!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி ஒருவர், விவசாயம் கட்டுப்படியாகவில்லை என்று கூறி, ஹெலிகாப்டர் வாங்கி வாடகைக்கு விடுவதற்காக வங்கியில் கடன் கேட்டு அதிகாரிகளை அதிர வைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், ஹிங்கோலி மாவட்டம் கோரேகாவை அடுத்த தக்தோதா கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் பதங்கே (22). இளம் விவசாயியான இவர், ஹெலிகாப்டர் வாங்குவதற்காக கோரேகாவில் உள்ள வங்கி ஒன்றில் 6 கோடியே 65 லட்சம் ரூபாய் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இதுகுறித்து விவசாயி கைலாஷ் பதங்கே கூறியதாவது: “எனக்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் கடந்த 2 ஆண்டுகளாக சோயா பயிர் செய்தேன்.
ஆனால், பருவம் தவறிய மழை மற்றும் வறட்சி போன்ற காரணங்களால் எனக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. பயிர் காப்பீட்டு திட்டத்திலும் உரிய இழப்பீடு கிடைக்கவில்லை.
எனவே, ஹெலிகாப்டர் ஒன்றை விலைக்கு வாங்கி அதை வாடகைக்கு விட முடிவு செய்திருக்கிறேன். பெரிய மனிதர்கள் மட்டும் தான் பெரிய கனவுகளை கொண்டிருக்க வேண்டுமா..?. விவசாயிகளும் பெரிய கனவு காண வேண்டும்.
எனவே தான் ஹெலிகாப்டர் வாங்க இவ்வளவு பெரிய தொகையை கடனாக கேட்டு விண்ணப்பித்துள்ளேன். மற்ற தொழில்களில் போட்டி அதிகம். எனவே ஹெலிகாப்டர் வாங்கி வாடகைக்கு விடும் தொழில் செய்ய முடிவு செய்துள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.