1. Home
  2. தமிழ்நாடு

சிறையில் கைதியிடம் லஞ்சம்.. உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்..!

சிறையில் கைதியிடம் லஞ்சம்.. உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்..!


தூத்துக்குடி மாவட்டம் பேரூரணியில் கிளை சிறை அமைந்துள்ளது. இங்கு அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை குறிப்பிட்ட நாட்களில் உறவினர்கள் சந்தித்து பேச அனுமதி அளிக்கப்படுகிறது.

இதற்காக மனு கொடுக்கும் உறவினர்களை சோதனை நடத்திய பிறகு, சிறை வளாகத்தில் உள்ள கைதிகள் சந்திக்கும் பகுதிக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு கைதிகளை சந்திக்க வரும் உறவினர்கள் மனு கொடுத்த போது அவர்களிடம் இருந்து லஞ்சமாக பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்லும்போது அவர்களின் உறவினர்களிடம் பணம் பெறப்படுவதாகவும் புகார்கள் எழுந்தது.

இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு பேரூரணி சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு கைதி அழைத்து செல்லப்பட்ட போது, அவருடைய உறவினர்கள் கொடுத்த பணத்தை அந்த கைதி, சிறை அதிகாரியிடம் வழங்கி உள்ளார்.

அதை சிலர் செல்போனில் வீடியோ காட்சியாக பதிவு செய்து சிறைத்துறை தலைமை அதிகாரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த வீடியோ சமூக வலைதளத்திலும் பரவியது.

இதையடுத்து, சிறைத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்த நிலையில் பேரூரணி சிறை உதவி ஜெயிலர் செல்ல பெருமாளை பணியிடை நீக்கம் செய்து பாளையங்கோட்டை மத்திய சிறை சூப்பிரண்டு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

இது தவிர, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்த பேரூரணி ஜெயிலர் ராதாகிருஷ்ணன் திருச்சி பயிற்சி மையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி பிறப்பித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like