Logo

அக்னி பாத் போராட்டம்.. 12 ரயில்கள் தீவைத்து எரிப்பு.. 300 ரயில் சேவைகள் நிறுத்தம் !!

 | 

மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று தீவைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பிஹார் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 12 ரயில்களுக்கு தீவைக்கப்பட்டன. போராட்டம் நாடு முழுவதும் சுமார் 300 ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் இளைஞர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுக்கு பணிக்கு சேர்த்துக் கொள்ளும் ‘‘அக்னி பாதை’’ திட்டத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 13ஆம் தேதி அறிமுகம் செய்தார். இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக பிகாரில் ராணுவத்தில் சேருவதற்காக பயிற்சி பெற்று வந்த ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதலில் அங்கிருந்தே போராட்டம் தொடங்கியது.

இந்நிலையில் அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 3ஆவது நாளாக போராட்டம் நீடித்தது. பிகாரின் பல இடங்களில் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின்போது மேலும் 3 ரயில்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். ஜம்மு தாவி-கவுகாத்தி எக்ஸ்பிரஸ், சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ், குகாதியா ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டிருந்த ரயில் ஆகியவற்றுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். அந்த 3 ரயில்களில் இருந்த 20 பெட்டிகள் எரிந்து நாசமாயின.


இந்நிலையில், நேற்று காலை தெலங்கானா மாநிலம், செகந்திராபாத் ரயில் நிலையம் முன் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காலை 9 மணியளவில் போராட்டம் தொடங்கினர். சிறிது சிறிதாக வந்த கூட்டம் அதிக அளவில் ரயில் நிலையம் முன் சேர தொடங்கினர். இவர்கள் தங்களை, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ராணுவ வேலை வாய்ப்பில் சேர உடற்தகுதி பெற்றவர்கள் என்றும், இதுவரை எழுத்து தேர்வு நடக்காததால், வேலையில் சேர முடியாமல் கஷ்டப்படுகிறோம் என்றும், இதனால், அக்னி பாதை திட்டத்தை எதிர்க்கிறோம் என்றும் கூறி திடீரென ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.

பின்னர் அக்கும்பல் அப்படியே ரயில் நிலையத்துக்குள் புகுந்தது. அங்கு பிளாட்பாரங்களில் உள்ள கடைகளில் இருந்த பொருட்களை எடுத்து வீசினர். ரயில்வே பார்சல் சர்வீஸ் இடத்துக்கு சென்று அங்குள்ள பொருட்களை எடுத்து தண்டவாளத்தின் மீது வீசி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் பயணிகள் அலறினர். பணியாளர்கள் சிதறி ஓடினர். தடுக்க வந்த ரயில்வே போலீசார்களை தண்டவாளங்களில் நடுவே உள்ள கற்களை எடுத்து அவர்களை தாக்கினர்.  


அப்போது, சிலர் அங்கு நின்றுகொண்டிருந்த ஈஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைத்தனர். ரயில் கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால், போலீசார் நிலைமையைச் சமாளிக்க துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் வாரங்கல் மாவட்டம், டபீர்பேட்டா பகுதியை சேர்ந்த ராகேஷ் எனும் இளைஞர் உயிரிழந்தார். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயிலில் வைக்கப்பட்ட தீக்கு 4 பெட்டிகள் சேதமடைந்தன.

செகந்திராபாத் சம்பவத்தால் தென்மத்திய ரயில்வே துறை 57 ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்து, ஹைதராபாத்-ஷாலிமார், அகமத்நகர்-செகந்திராபாத், செகந்திராபாத்-அகமத் நகர் ஆகிய 4 ரயில்களை நேற்று முழுவதுமாக ரத்து செய்தது. ஷீரடி-சாய் நகர், புவனேஷ்வர்-மும்பை ஆகிய ரயில்கள் மாற்று தடங்கள் மூலம் செல்ல அனுமதிக்கப்பட்டது.


செகந்திராபாத் சம்பவத்தால் வட மத்திய ரயில்வே துறையும் 8 ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்வதாகவும், 2 ரயில்களை முழுவதுமாக ரத்து செய்வதாகவும் அறிவித்தது. நாடு முழுவதும் நேற்று மட்டும் 12 ரயில்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இந்த போராட்டத்தால் நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. 

இந்நிலையில் அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவோர் வன்முறையை தவிர்க்குமாறும், ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP