1. Home
  2. தமிழ்நாடு

அதிமுக, பாஜக, திமுகவினர் இணைந்து செயல்பட்டனர்.. பேரவையில் அன்பில் மகேஷ் பேச்சு..!

அதிமுக, பாஜக, திமுகவினர் இணைந்து செயல்பட்டனர்.. பேரவையில் அன்பில் மகேஷ் பேச்சு..!


தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நேற்று (27-ம் தேதி) அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில், மின்சாரம் தாக்கியதில் 3 மாணவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த பகுதிக்கு நேற்று காலை சென்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அங்கு நடைபெற்ற மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டார்.

இந்நிலையில், இன்று (28-ம் தேதி) சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது: “களிமேடு பகுதியில் நேற்று காலை 3 மணி அளவில் விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில், காலை 5 மணிக்கு தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்ட முதல்வர், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இதையடுத்து, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளுடன் அங்கு சென்றோம். கடந்த 11 மாதங்களாக பல பள்ளி நிகழ்வுகளில் கலந்து கொண்டு பல மாணவர்களுக்கு மெடல்கள், மாலைகள் சூட்டியிருக்கிறேன். ஆனால், அந்த பிணவறையில் நான் 8-ம் வகுப்பு மாணவருக்கு மாலை வைத்தேன்.

தொடர்ந்து, முதல்வரிடம், எல்லா உடல்களுக்கும் இங்கே மாலை அணிவித்து விடலாம் எனக் கூறினோம். அதை மறுத்த முதல்வர், அனைவரது வீடுகளுக்கும் நேரடியாக சென்று உறவினர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் எனக் கூறி அனைத்து வீடுகளுக்கும் நடந்தே சென்று நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

விபத்து நடந்த பகுதியின் ஊராட்சித் தலைவர் அதிமுகவைச் சேர்ந்தவர்; ஒன்றிய கவுன்சிலர் பாஜகவைச் சேர்ந்தவர்; மாவட்ட கவுன்சிலர் திமுகவைச் சேர்ந்தவர். இவர்கள் மூன்று பேரும் இணைந்து பணியாற்றினார்கள்” எனத் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like