8,647 கி.மீ தூரம் திமுகவின் மாபெரும் இரு சக்கர வாகனப் பேரணி : இன்று அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்..!
அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் இன்று புதன்கிழமை (நவ. 15) கன்னியாகுமரி வருகிறாா்.
தி. மு.க. இளைஞரணி 2 ஆவது மாநில மாநாடு, அடுத்த மாதம் 17 ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. 10 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரியிலிருந்து, திமுக இளைஞா்அணியின் சாா்பில் மாநாடு விளக்க இருசக்கர வாகன பேரணி இன்று தொடங்குகிறது. இந்தப் பேரணியை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைக்கிறாா்.
நவம்பர் 15-ம் தேதி தொடங்கி உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளான நவம்பர் 27-ம் தேதி வரை இரு சக்கர வாகன பிரச்சார பேரணி நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 188 இரு சக்கர வாகனங்கள் இந்த பிரச்சார பயணத்தில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
இதில் கலந்து கொள்பவர்களுக்கு மூன்று வேளையும் அறுசுவை உணவு, தங்குமிடம், தலைக்கவசம், கொள்கை முழக்க டி-ஷர்ட், வாகனக் கொடிக்கம்பம், டிராவல் பேக், முதலுதவி சிகிச்சை மெடிக்கல் கிட், சோப்பு, சீப்பு, பேஸ்ட் கிட், குடிநீர் என அனைத்து அடிப்படை வசதிகளும் திமுக இளைஞரணி சார்பில் செய்து கொடுக்கப்படுகிறது.
திமுக ரைடர்ஸ் குழுவில் இணைந்து தமிழகமெங்கும் இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பேரணியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் ஷூ கட்டாயம் அணிய வேண்டும், கருப்பு அல்லது ஜீன்ஸ் பேண்ட் அணிய வேண்டும். ஓட்டுநர் உரிமத்தின் நகலைக் கொடுக்க வேண்டும். வாகன உரிமைச் சான்று நகல் கொடுக்க வேண்டும். வாகனக் காப்பீட்டு சான்று நகல் தர வேண்டும் என்பன உள்ளிட்ட இன்னும் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.13 நாட்களில் 8,647 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் வகையில் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.