8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம்!!
கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில், சென்னையில் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும், மோக்கா புயலுக்கு பிறகு வெப்பநிலையானது, கடுமையாக அதிகரித்துள்ளது. புயல், ஈரப்பதத்தை ஈரத்துக் கொண்டு சென்றதால் அதிக வெப்பம் பதிவாவதாக கூறப்படுகிறது.
சென்னையில் தொடர்ந்து 4ஆவது நாளாக இன்றும் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெயில் பதிவாகியுள்ளது. இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று 108.6 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. வெயிலின் தாக்கம் இனி வரக்கூடிய நாட்களிலும் அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவை விட 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பத்தை தணிக்க மக்கள் இளநீர், தர்பூசணி மற்றும் குளிர்பான கடைகளை நாடிச்செல்கின்றனர். ஆனாலும், வெயில் வாட்டி வதைப்பதால், மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
newstm.in
.png)