மகா கும்பமேளாவில் 4 நாட்களில் 7 கோடி பேர் புனித நீராடல்..!

வழக்கமாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடப்பது வழக்கம். அந்த வகையில், பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஜன.,13ம் தேதி கும்பமேளா துவங்கியது. பிப்.,26 வரை 45 நாட்கள் நடக்கிறது. இதில் 45 கோடிக்கும் அதிகமான மக்கள் கங்கை நதியில் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துவங்கிய முதல் நாள் அன்று, கங்கை, யமுனை, மற்றும் புராணங்களில் கூறப்படும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் 1.75 கோடி பேர் புனித நீராடினர். இவ்வாறு அடுத்தடுத்த நாட்களில் கோடிக்கணக்கான மக்கள் கங்கை நதியில் புனித நீராடி வருகின்றனர். வெளிநாட்டினர், துறவிகள், ஆன்மிகவாதிகள் என பலரும் பிரயாக்ராஜ் நகரில் கூடி உள்ளனர்.
இந்நிலையில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் ஏராளமானோர் கூடியுள்ள பிரயாக்ராஜ் நகரில் இன்று 30 லட்சம் பேர் புனித நீராடி உள்ளனர். இதுவரை 7 கோடி பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடும் பாக்கியத்தை பெற்றுள்ளனர்.இன்று புனித நீராடிய 30 லட்சம் பேருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.