டிஸ்னி நிறுவனத்தின் பங்குதாரர் ஆன ஜார்ஜ் ஃப்ளாய்டின் 6 வயது மகள் !
டிஸ்னி நிறுவனத்தின் பங்குதாரர் ஆன ஜார்ஜ் ஃப்ளாய்டின் 6 வயது மகள் !

அமெரிக்காவில் கறுப்பின நபர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் போலீசார் பிடியில் உயிரிழந்தார். இந்த மரணம் கொரோனாவுக்கும் மத்தியில் அமெரிக்காவில் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் பல நகரங்கள் பற்றி எரிந்தன.
இந்த போராட்டம் பல நாடுகளுக்கு பரவி சர்வதேச கவனத்தை ஈர்த்தது. அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் கறுப்பின மக்களை அடிமையாக நடத்திய பலரின் சிலைகள் போராட்டக்காரர்களால் இடிக்கப்பட்டுள்ளன.
இது ஒருபக்கம் இருக்க ஜார்ஜ் ஃப்ளாய்டை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்துக்கு உதவிகள் குவிந்து வருகின்றன. அவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.
ஃப்ளாய்டின் குழந்தைகளுக்குச் சர்வதேச அளவில் உதவிக் கரம் நீண்டுள்ளது. அவரது பேரப் பிள்ளைகளின் படிப்புக்கு முழு உதவித்தொகை அளிக்க ‘ஆல்பா கப்பா ஆல்பா’ (Alpha Kappa Alpha) என்ற அமைப்பு முன்வந்துள்ளது.
இந்நிலையில், ஃப்ளாய்டின் 6 வயது மகளான ஜியானாவின் பெயரில் டிஸ்னி நிறுவனத்தின் பங்குகளை வாங்கிப் பரிசளித்திருக்கிறார் அமெரிக்காவின் பிரபலப் பாடகியான பார்பரா ஸ்ட்ரெயிசண்ட்.
அத்துடன், தான் சிறுவயதில் நடித்த ‘மை நேம் இஸ் பார்பரா’ மற்றும் ‘கலர் மி பார்பரா’ ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் காணொலிப் பதிப்புகளையும் ஜியானாவுக்குப் பரிசாக வழங்கியிருக்கிறார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிஸ்னி நிறுவனப் பங்குக்கான சான்றிதழுடன் பார்பராவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜியானா. எத்தனை பங்குகள் ஜியானாவின் பேரில் வாங்கப்பட்டுள்ளன என்பது பற்றித் தெரிவிக்கப்படவில்லை.
இன்றைய தேதியில் டிஸ்னி நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 118.44 அமெரிக்க டாலர்கள். தொலைநோக்குப் பார்வையுடன் செயலாற்றியுள்ள பார்பராவுக்கு உலகம் முழுக்கப் பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன.
newstm.in