1. Home
  2. தமிழ்நாடு

பிரியாணிக்கு 40 பைசா கூடுதலாக வசூல்.. வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.4 ஆயிரம் அபராதம்..!

பிரியாணிக்கு 40 பைசா கூடுதலாக வசூல்.. வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.4 ஆயிரம் அபராதம்..!


பிரியாணிக்கு 40 பைசா கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக ஹோட்டல் நிா்வாகம் மீது வழக்கு தொடர்ந்த முதியவருக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து பெங்களூரு நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு அல்சூர் பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்ம மூர்த்தி (61). இவர், இன்பாண்டரி ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ம் தேதி 2 பிரியாணி பார்சல் வாங்கினார்.

இதற்கு 264 ரூபாய் 60 பைசா கட்டணம் செலுத்தும்படி ஹோட்டல் காசாளர் கூறினார். அதன்படி பணம் செலுத்திய நரசிம்ம மூர்த்தியிடம் இருந்து 265 ரூபாயை காசாளர் வாங்கிக் கொண்டார்.

இதையடுத்து, மீதி 40 பைசாவை கொடுக்கும்படி நரசிம்மமூர்த்தி கேட்டுள்ளார். அதற்கு காசாளர், மேலாளர், கண்காணிப்பாளர் ஆகியோர் சரியான பதில் அளிக்கவில்லை. 40 பைசாவையும் நரசிம்ம மூர்த்திக்கு கொடுக்கவில்லை.

இதனால் பிரியாணி வாங்கிய தன்னிடம் 40 பைசா தராமல் ஹோட்டல் நிர்வாகம் ஏமாற்றி விட்டதாகவும், தன்னிடம் கூடுதல் பணம் வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும், ஹோட்டல் நிர்வாகத்திடம் இருந்து 40 பைசாவை பெற்றுக் கொடுக்கும்படியும் கூறி பெங்களூரு நுகர்வோர் கோர்ட்டில் நரசிம்மமூர்த்தி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி முன்னிலையில் நடைபெற்று வந்தது. அப்போது, ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் ஹோட்டலில் 2 பிரியாணியை பார்சல் வாங்கி இருக்கிறார்.

ஒரு பிரியாணியின் விலை 120 ரூபாய் ஆகும். 2 பிரியாணிக்கும் 240 ரூபாய், பார்சல் கட்டணம், ஜி.எஸ்.டி. கட்டணம் சேர்த்து ஒட்டு மொத்தமாக 264 ரூபாய் 60 பைசா வாடிக்கையாளர் கொடுக்க வேண்டும்.

சில்லறை பிரச்சனை மற்றும் ஜி.எஸ்.டி. சட்ட விதிகளின்படி 50 பைசாவுக்கு மேல் இருந்தால், வாடிக்கையாளரிடம் இருந்து ஒரு ரூபாயை பெறலாம் என்று விதி உள்ளது. அதன்படியே, ஹோட்டல் நிர்வாகம் ரூ.264.60 பைசாவுக்கு பதில், 265 ரூபாயை கட்டணமாக பெற்றுள்ளது என்று வாதிட்டார்.

இதையடுத்து, நரசிம்மமூர்த்தி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி, ‘ஜி.எஸ்.டி. வரி சட்டத்தின் அடிப்படையிலேயே ஹோட்டல் நிர்வாகம் நடந்து கொண்டுள்ளதால், 40 பைசாவை வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டியதில்லை.

எனவே, கோர்ட் நேரத்தை வீணடித்த மனுதாரருக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த அபராத தொகையை ஹோட்டல் நிர்வாகத்திடம் மனுதாரர் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்.

Trending News

Latest News

You May Like