கேரளாவில் அரசு பேருந்து கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு..!
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி மாவேலிகரை. இப்பகுதியில் வசிக்கும் 35 பேர் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பாக சுற்றுலா வந்தனர். இதற்காக கேரள அரசு பேருந்தை வாடகைக்கு எடுத்து தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளை பார்த்து விட்டு நேற்று முன்தினம் மதுரை மீனாட்சிஅம்மன் கோயிலுக்கு வந்தனர். அங்கு தரிசனம் முடித்துவிட்டு தேனி, குமுளி வழியே இன்று (ஜன.6) ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
பேருந்தை பிஜூதாமஸ் (43) என்பவர் ஓட்டி வந்தார். வண்டி இடுக்கி மாவட்டம் குட்டிகானத்தை அடுத்து புல்லுப்பாறை எனும் பகுதியில் சென்ற போது நிலை தடுமாறியது. இதில் சாலையின் பக்கவாட்டு ஸ்டீல் பேரிகார்டை உடைத்துக் கொண்டு 60அடி பள்ளத்தில் ஒரு பக்கமாக கவிழ்ந்தது.இதில் மாவேலிக்கரையைச் சேர்ந்த பிந்து (44), ரம்யா (60), அருண்ஹரி (40). சங்கீத் (41) ஆகியோர் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
5 பேர் பலத்த காயங்களுடன் முண்டக்காயம், பீர்மேடு உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர் கிரேன் மூலம் மீட்புப்பணி நடைபெற்றது. அமைச்சர்கள் ரோஷி அகஸ்டின், வி.என்.வாசவன், இடுக்கி மாவட்ட ஆட்சியர் வி.விக்னேஷ்வரி, பூஞ்சார் எம்எல்ஏ செபாஸ்டியன், இடுக்கி எம்பி டீன் குரியகோஸ் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து மீட்புப் பணியை துரிதப்படுத்தினர்.