10 தலைமறைவு குற்றவாளிகள் – தகவல் அளித்தால் சன்மானம்!!

10 தலைமறைவு குற்றவாளிகள் – தகவல் அளித்தால் சன்மானம்!!
X

9 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவன அதிபர்கள் குறித்து துப்பு கொடுத்தால் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆருத்ரா கோல்டு நிறுவனம், மக்களிடம் ரூ.2 ஆயிரத்து 438 கோடி வசூலித்து மோசடி செய்துள்ளது. இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராஜசேகர், ஹரிஷ், மைக்கேல் ராஜ், நாராயணி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

எல்.என்.எஸ். சர்வதேச நிதி சேவை என்ற நிறுவனம் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் பொதுமக்களிடம் இருந்து திரட்டியதாக தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லட்சுமி நாராயணன், வேதநாராயணன், ஜனார்த்தனன், மோகன்பாபு ஆகியோர் தலைமறைவாக இருக்கின்றனர்.அதேபோல், சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்ட 'ஹிஜாவு அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், ரூ.600 கோடி அளவுக்கு வசூல் செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், சவுந்தர்ராஜன் என்பவரும், அவர் மகன் அலெக்சாண்டர் என்பவரும் தலைமறைவு குற்றவாளிகளாக உள்ளனர்.

இந்த 3 நிறுவனங்களில் முதலீட்டு தொகை செலுத்தி ஏமாந்த பொது மக்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கலாம். இந்த 3 நிறுவனங்கள் மீதும் தொடரப்பட்ட வழக்குகள் அடிப்படையில் தலைமறைவு குற்றவாளிகளாக இருப்பவர்கள் பற்றி தகவல் தெரிந்த பொதுமக்கள் பொருளாதார குற்றப்பிரிவுக்கு தெரிவிக்கலாம்.

பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல், உறுதியாக இருப்பின் அவர்களுக்கு தக்க சன்மானம், ரொக்கப்பரிசு வழங்கப்படும். தகவல் கொடுப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it