பரபரப்பு! போலி பாஸ்போர்ட் வழக்கில் 41 பேருக்கு தொடர்பு!!

பரபரப்பு! போலி பாஸ்போர்ட் வழக்கில் 41 பேருக்கு தொடர்பு!!
X

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய போலி பாஸ்போர்ட் வழக்கில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்பட 41 பேருக்கு தொடர்பு இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மதுரை வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த வழக்கறிஞர் முருக கணேசன் என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அதில் ஏராளமானவர்களுக்கு போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டு இருப்பதாகவும், அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாஸ்போர்ட் மோசடி வழக்கில் விசாரணையை 3 மாதத்தில் முடிக்க கெடு விதித்து உத்தரவிட்டு இருந்தது. இந்த மோசடியில் பல்வேறு முக்கிய போலீஸ் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டு உள்ளதால் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய போலீஸார் தாமதித்து வருகின்றனர். அவர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் முருக கணேசன் மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கியது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக 41 பேர் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டு உள்ளனர். இதில் 14 பேர் மத்திய அரசு ஊழியர்கள், 5 பேர் தமிழக அரசு ஊழியர்கள் என்று தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

மத்திய அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய அனுமதிக்குமாறு மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைகளிடம் மனு அனுப்பி உள்ளோம். இதில் ஒரே ஒரு அதிகாரியிடம் மட்டும் விசாரணை நடத்த அனுமதி கிடைத்துள்ளது. மற்றவர்கள் மீது விசாரணை நடத்த அனுமதி கேட்ட மனு நிலுவையில் உள்ளது என்றார்.இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பாஸ்போர்ட் வழக்கு சம்பந்தமான தங்களின் பதில் குறித்த தகவல்களை நிலை அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள். அதை பரிசீலித்துவிட்டு, இந்த அவமதிப்பு வழக்கு விசாரிக்கப்படும் என்று அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

newstm.in

Next Story
Share it