1. Home
  2. தமிழ்நாடு

பீரோவை மாடியில் இருந்து கீழே இறங்குகையில் 3 பேர் மின்சாரம் தாக்கி பலி!!

பீரோவை மாடியில் இருந்து கீழே இறங்குகையில் 3 பேர் மின்சாரம் தாக்கி பலி!!

தர்மபுரி மாவட்டம் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (52). இவரது வீட்டின் 2-ம் மாடியில் இலியாஸ் பாஷா (70) என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்தார். இன்னும் அதிக வசதிகளுடன் கூடிய வேறு வீட்டிற்கு குடியேற நினைத்த இலியாஸ் பாஷா பச்சையப்பனிடம் முறைப்படி கூறிவிட்டு இன்று வீட்டை காலி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

வீட்டில் இருந்த பொருட்களை வாகனத்தில் ஏற்றி புது குடியிருப்புக்கு எடுத்துச் செல்லும் பணியில் இன்று காலை மும்முரமாக ஈடுபட்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த இரண்டு பீரோக்களை கயிறுமூலம் 2-வது மாடியில் இருந்து கீழே இறக்கியுள்ளனர். இந்தப் பணியில் மினி லாரி ஓட்டுநர் தர்மபுரி ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த மணி மகன் கோபி (23), மேளக்கார தெருவைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் மகன் குமார் (23) ஆகியோருடன் இலியாஸ் பாஷா மற்றும் வீட்டு உரிமையாளர் பச்சையப்பன் ஆகியோரும் உதவியுள்ளனர்.

வீட்டின் முன்பகுதியில் அமைந்துள்ள மின்பாதைக்கும் கட்டிடத்துக்கும் குறுகிய இடைவெளி மட்டுமே உள்ளது. இந்த இடைவெளியில் முதலில் ஒரு பீரோவை கயிறு மூலம் கீழே இறக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, 2வது பீரோவை இறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பீரோ மின் பாதையில் உரசியுள்ளது.


பீரோவை மாடியில் இருந்து கீழே இறங்குகையில் 3 பேர் மின்சாரம் தாக்கி பலி!!

இதில், நான்கு பேர் உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. இந்த விபத்தில், வீட்டு உரிமையாளர் பச்சையப்பன், வாடகைக்கு குடியிருந்த இலியாஸ் பாஷா, ஓட்டுநர் கோபி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். குமார் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தர்மபுரி நகரக் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்துகின்றனர். வீடு காலி செய்யும்போது மின்சாரம் பாய்ந்து வீட்டு உரிமையாளர், வாடகைக்கு குடியிருந்தவர், டெம்போ ஓட்டுநர் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like