பழனியில் உள்ள தங்கும் விடுதியில் தூக்குப்போட்டு கேரள தம்பதி தற்கொலை!!

பழனியில் உள்ள தங்கும் விடுதியில் தூக்குப்போட்டு கேரள தம்பதி தற்கொலை!!
X

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பல்லுருத்தி பகுதியில் வசித்து வந்தவர் ராமன்ரகு (48). கூலித்தொழிலாளியான இவருக்கு உஷா (46) என்கிற மனைவி இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தம்பதி இருவரும், பழனிக்கு வந்தனர். அப்போது அவர்கள் அடிவாரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்று, சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறி அறை எடுத்து தங்கினர்.


இந்த நிலையில் நேற்று மாலை ராமன்ரகு-உஷா தங்கியிருந்த அறையின் கதவு வெகு நேரமாக திறக்கப்படாமல் பூட்டியே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள், பழனி அடிவாரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விடுதி அறையின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ராமன்ரகு, உஷா ஆகிய 2 பேரும் தூக்கில் பிணமாக தொங்கினர். இதையடுத்து அவர்களது உடல்களை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் தங்கியிருந்த விடுதி அறையை சோதனை செய்தனர்.

அப்போது அங்கு தம்பதி எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அதில், அவர்கள் கடன் தொல்லையால் மனஉளைச்சலில் இருந்து வந்ததாகவும், கடனை திரும்ப கேட்டு சிலர் அவதூறாக பேசியதாகவும், அதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாக அதில் கூறப்பட்டிருந்தது என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து கேரளாவில் உள்ள ராமன்ரகுவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்த பிறகே தம்பதி தற்கொலைக்கான காரணம் முழுமையாக தெரியவரும் என்று போலீசார் கூறினர்.

Next Story
Share it