இன்று கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பு : காங்கிரஸ் அறிவிப்பு..!!

சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஒருமனதாக இயற்றி கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவை வேண்டுமென்றே காலதாமதம் செய்து அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கும், நீட் விலக்கு, பல்கலைக் கழக சட்டங்கள் மேலும் தமிழ்நாடு மக்கள் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும், இயற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தவும், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட நினைக்கும் கவர்னரின் செயலுக்கு வன்மையாக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
குடியரசு தினத்தன்று கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்துள்ளன. ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.