குட்கா, பான் மசாலா – தடை நீக்கம்..!!

குட்கா, பான் மசாலா – தடை நீக்கம்..!!
X

கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா, குளிரூட்டப்பட்ட புகையிலைகளுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் ஒரு உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு ஒவ்வொரு ஆண்டும் நீடிக்கப்பட்டு வருகின்றது. அதே சமயம் உத்தரவை மீறியதாக சில நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.


இந்த நிலையில், இந்த சட்டத்தை ரத்து செய்ய கோரியும், தடை உத்தரவை ரத்து செய்ய கோரியும், தங்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்ய கோரியும் 2 நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலையை உணவுப்பொருளாக சுட்டிக்காட்டவில்லை என்றும், சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் விளம்பர படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்தல் சட்டத்தில் புகையிலைப் பொருட்களை விளம்பரப்படுத்துவதை முறைப்படுத்துவதைப் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

புகையிலைப் பொருட்களுக்கு முழு தடை விதிக்க இரு சட்டங்களும் வழிவகை செய்யவில்லை. தடை விதிக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறி, உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தை மீறி, புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். இந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளையும் ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்Next Story
Share it