விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அறிவிப்பு..!

வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் நெற்பயிரில் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், இழப்பினை தவிர்த்திட பயிர் காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்வது நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இ-சேவை மையங்களில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் குவிந்தனர்.
சான்றுகள் கிடைப்பதில் கால தாமதம், சர்வர் பிரச்னை போன்ற காரணங்களால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பயிர்க் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் தமிழக அரசும் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பயிர்க் காப்பீடு செய்ய நவம்பர் 22-ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.