முதலமைச்சராக தேவேந்திர பாட்னாவீஸ் பதவியேற்பு..!
மராட்டிய மாநில சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் ஆளும் பாதிய ஜனதா கட்சி தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. மொத்தமுள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 132 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றது. கடந்த நவம்பர் 26ம் தேதியுடன் மராட்டிய மாநில சட்டமன்றத்திற்கான பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் யார் என்பது குறித்தான முடிவை தேர்தல் முடிந்து 10-நாட்களாக தொடர்ந்து ஆலோசனைகள் நடந்தது.
பல முறை ஆலோசனைகள் நடத்திய பிறகும் முதலமைச்சர் யார் எந்த கட்சியை தேர்ந்தவர் என்பதா முடிவு எடுக்க முடியாமல் பாரதீய ஜனதா கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் திணறின. இந்நிலையில் பாஜக மாநில தலைவரும் துணை முதலமைச்சருமான தேவேந்திர பாட்னாவீஸ் மாநிலத்தின் முதலமைச்சராக ஒரு மனதாக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து நேற்று மாலை மராட்டிய மாநிலம் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனை, தேவேந்திர பாட்னாவீஸ்-ஏக்நாத் ஷிண்டே-அஜித்பவார் உள்ளிட்ட மூவரும் சந்தித்து மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்கள். கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததை தொடர்ந்து இன்று மும்பையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
பதவியேற்பு விழா தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் வியாழக்கிழமை மாலை 5.30 மணி அளவில் நடைபெற்றது. விழா மேடைக்கு பிரதமர் மோடி வந்ததும், தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதையடுத்து, தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர், முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு பூங்கொத்துக் கொடுத்து ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து, தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தேவேந்திர ஃபட்னாவிஸை தொடர்ந்து சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இருவருக்கும் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பூங்கொத்துக்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர், இருவரும் பிரதமர் மோடி உள்ளிட்டோரிடம் வாழ்த்து பெற்றனர்.
பதவியேற்பு விழாவில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுஹான், நிர்மலா சீதாராமன், மாநில முதல்வர்கள் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு, யோகி ஆதித்யா நாத், பூபேந்திர படேல், புஷ்கர் சிங் தாமி, மோகன் சரண் மாஞ்சி, பிரமோத் சாவந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் பதவியேற்பு விழாவில் பாலிவுட் திரை பிரபலங்களான ஷாருக்கான், சல்மான் கான், ரன்பிர் கபூர், ரன்வீர் சிங், தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பதவியேற்பு விழாவையொட்டி 4,000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.