மீண்டும் அரங்கேறிய சோகம்..! 6 சிறுவர்களை கடித்து குதறிய வெறிநாய்!

ஆம்பூர் நகராட்சி பகுதியில் 36 வார்டுகள் உள்ளன. இந்தப் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன.
இந்த நாய்கள் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை துரத்துவதும், கடிப்பதுமாக இருந்து வருகிறது. மேலும், வாகனங்களில் செல்வோரை துரத்திச் செல்கையில், வாகன ஓட்டுகள் தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, அந்தப் பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார்கள் அளித்தும் தற்போது வரை எந்த வித நடவடிக்கையும் இல்லை. இதனால், நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், ஆம்பூர் நகராட்சி பகுதியில் உள்ள புதுமனை, பிலால்நகர், தார்வழி ஆகிய பகுதிகளில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை திடீரென அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கத் தொடங்கியது.
சிறுவர்கள் சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அவர்களை நாய்களிடம் இருந்து பாதுகாப்பாக மீட்டனர். இதில் சரண், கிஷோர், முகமது உள்ளிட்ட 6 சிறுவர்களுக்கு கால், கை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக இந்த சிறுவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, பொதுமக்கள் ஆம்பூர் நகராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், நகராட்சி ஊழியர்கள் அந்த வெறிநாய்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் பகுதியில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றித் திரிந்து வருகின்றன. இந்த நாய்களால் பொதுமக்களுக்கு தினந்தோறும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதில், அதிகமாக சிiறுவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.