மாணவர்களே ரெடியா ? பொதுத் தேர்வு அட்டவணை இன்று காலை வெளியாகிறது : அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார்
2023 – 24 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வகுப்புகள் ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டு மே மாதத்தில் முடிக்கப்பட்டது. இதனால் நடப்பு கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் மார்ச் மாதங்களில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக, தமிழகத்தில் பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை அக்டோபர் இறுதியிலோ அல்லது நவம்பர் மாத தொடக்கத்திலோ வெளியிடப்படும். ஆனால், நடப்பாண்டு பொதுத்தேர்வு அட்டவணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அந்த தேதியை பார்த்துவிட்டு பொதுத்தேர்வுகளை அறிவிக்கலாம் என தமிழக அரசு முடிவு செய்திருந்தது.
ஆனால், பாராளுமன்றத் தேர்தல் தேதி இப்போதைக்கு வெளியிடப்படுவதாக தெரியவில்லை. இதையடுத்து, பொதுத்தேர்வு தேதிகளை அறிவித்துவிடலாம் என தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இப்போது தேர்வு அட்டவணையை வெளியிட்டால் தான், மாணவர்கள் அதற்கேற்ப தயாராக முடியும் என்பதால் இந்த முடிவை பள்ளிக்கல்வித் துறை எடுத்திருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்னும் ஒரு சில நாட்களில் பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், இன்று (நவ.16) காலை 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார். நீட், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளை கருத்தில்கொண்டு பொதுத்தேர்வு தேதிகள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.